Friday, December 31, 2010

மொபைல் அப்ளிகேசன்ஸ்

முன்குறிப்பு : எல்லோரும் கண்டிப்பா போன் வச்சிருப்போம். அதுல நிறைய அப்ளிகேசன்ஸ் வச்சிருப்போம். சிலது நமக்கு தெரிஞ்சிருக்கும் , சிலது தெரிஞ்சிருக்காது. இங்க நான் பயன்படுத்துற சில பயனுள்ள அப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருக்கேன் பாருங்க .!

முதல்ல பிரவுசர் பத்தி பார்க்கலாம் 

*.Opera Mini : இது பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துற ஒரு உலவி, பெரும்பாலும் நோக்கியா மொபைல்ல கூடவே வருது.!

*.Bolt Browser : இதுவும் ஒரு நல்ல உலவிதான். இதுல யுடியூப் வீடியோக்கள தரவிறக்கம் செய்யாம பார்க்கலாம்.!

*.UC Browser : இதுவும் ஒரு உலவிதான். இருந்தாலும் ஒபேரா அளவுக்கு வராது.!

மின்னரட்டை  ( சாட்டிங் ) :

*.e-Buddy : பெரும்பாலோர் பயன்படுத்துற அப்ளிகேசன் இதுதான். இதுல சாட் பண்ணுறது சுலபமா இருக்கும்.

Nimbuzz : இதுவும் ஒரு அருமையான அப்ளிகேசன் தான். இதுல நம்ம மொபைல்ல இருந்து போட்டோஸ் கூட சாட்டிங் போதே அனுப்ப முடியும். e-Buddy ய விட எனக்கு இது சிறப்பா தெரியுது.

இது தவிர mig33 , MGtalk, Palringo,RocketTalk, WeBuzz இப்படி எக்கச்சக்க அப்ளிகேசன்ஸ் இருக்கு. இது எல்லாத்திலையும் எனக்கு ரொம்ப பிடிச்சது Nimbuzz தான்.!

Dictionary :
நமக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாம இருக்கும் . அதுக்காக நிறைய Dictionary's இருக்கு.இங்க எனக்கு தெரிஞ்சா ரொம்ப ரொம்ப வாய்ப்பே இல்லாத ஒரு Dictionary பத்தி சொல்லுறேன்.

AROMA : அரோமா அப்படின்னு ஒரு Dictionary இருக்குங்க. உண்மைலேயே வாய்ப்பே இல்ல. அவ்ளோ நல்லா இருக்கு. அதில நிறைய விசயங்கள் இருக்கு .அதுல இருக்குற அதாவது ஒரே அப்ளிகேசன்ல இருக்குற விசயங்கள் என்னனு பார்த்தா  Jokes , Wikipedia , Local , Funstuff , Lifestyle இப்படி எல்லா விஷயங்களுமே இருக்கு . இதுல Local அப்படிங்கிற Tab ல நம்ம லோக்கல்ல இருக்குற எல்லா விசயங்களையும் அதாவது Pizza கடை எங்க இருக்குது அப்படின்னு கூட தேட முடியும் . உண்மைலேயே ரொம்ப கலக்கலா அப்ளிகேசன் இது . அதே மாதிரி Funstuff அப்படிங்கிற Tab ல Quotes, Facts, Proverbs, Story இப்படி நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கு . அதுவும் On this Day அப்படின்னு ஒண்ணு இருக்கு , அதுல போய் பார்த்தீங்க அப்படின்னா வரலாற்றுல அந்த தினத்துல நடந்த விசயங்கள சேர்த்து வச்சிருக்காங்க. சரி இன்றைய தினத்தோட சிறப்பு என்னனு பார்க்கலாம்னு பார்த்தேன் , கி.பி 600 ல ஆரம்பிச்சு ஒரு 26 நிகழ்வுகள் இருந்துச்சு.! ஆனா இந்த அப்ளிகேசனோட ஒரே பிரச்சினை என்னனா இது ஒரு ஆன்லைன் அப்ளிகேசன்.!

*.Dictionary v3.1 : இது ஒரு offline dictionary . உண்மைலேயே இது ரொம்ப நல்லா இருக்கு . ஆனா அரோமா ல இருக்குற அளவுக்கு நிறைய விசயங்கள் இல்லனா கூட ஒரு Dictionary அப்படிங்கிற அளவுக்கு பயனுள்ளதா இருக்கு. அது உருவாகினது கூட Vikrant Prakash Chavan அப்படின்கிற மகராஷ்டிரா காரர்.!

*.Window XP : என்னடா இது WindowsXp அப்படின்னு பார்க்காதீங்க , அப்படி ஒரு அப்ளிகேசன் இருக்கு. அத ஓபன் பண்ணினா நம்ம WindowsXp கம்பியூட்டர்ல எப்படி தெரியுதோ அதே மாதிரி உங்க மொபைல்ல தெரியும். ஆனா இது எதுக்கு பயன்படுதுன்னு தெரியல . ஒரு அழகுக்காக வச்சிக்கலாம்.!

சரி இவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருக்கே இதெல்லாம் எங்க போய் வாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.com , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.!


நீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.!

சந்தேகம் : இதுக்குப் பேர்தான் நல்லா பதிவா ..?


பின்குறிப்பு : என்னடா கோமாளி கூட நல்லா பதிவு எழுதிருக்கானே திருந்திட்டானோ அப்படின்னு நினைக்க வேண்டாம் .. 2011 வாழ்த்து சொல்லுறதுக்காக ஒரு உருப்படியான பதிவு போடணும்னு நினைச்சேன்.. அதான்.. நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க , வரப்போற ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் அப்படின்னு சொல்லி எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.!

Wednesday, December 29, 2010

நாட்டமையும் தமிழ்படம் நாட்டாமையும் பகுதி - 4

முன்குறிப்பு : நாட்டமையும் தமிழ்படம் நாட்டமையும் பதிவோட முந்தய பதிவுகள படிக்கணும்னு நினைக்கிறவங்க இங்க போய் படிச்சுகோங்க.!

இடம் : எமலோகம். நாட்டாமையும் தமிழ்படம் நாட்டாமையும் எமனின் முன்னால் நிற்கின்றனர்.!

எமன் : என்ன சித்திரகுப்தா இன்று ஒரு ஆள்தானே நமது கணக்கு , இரண்டு பேர் இருக்கின்றனர்.?

சித்திர குப்தன் :  யார் நாட்டாமைனு கேட்டா இரண்டுபேருமே நாந்தான்னு சொன்னாங்க அதான் குழப்பத்துல ரண்டுபேரையும் பிடிச்சிட்டு வந்திட்டேன்.

எமன் : சரி விடு , நான் விசாரிக்கிறேன் ..! உங்க ரண்டுபேர்ல யாருயா உண்மையான நாட்டாமை..?

நாட்டாமை பட நாட்டாமை : இதுல என்றா சந்தேகம் உனக்கு , நான் தாண்டா நாட்டமை , இவன் சும்மா டூப்பு.. தென்றா பசுபதி சொல்றா இவன் கிட்ட.!

சி.குப்தன் : யோவ் என்னப் பார்த்தா பசுபதி மாதிரியா தெரியுது , நான் பசுபதி இல்ல . அவன் இன்னும் பூமிலதான் இருக்கான்.!

தமிழ்ப்படம் நாட்டாமை : நீ மொதல்ல நிறுத்துரா , நான் தாண்டா இப்ப நாட்டமை  ,இவன்தான் செத்துப்போய்ட்டானே.! 


நா.நாட்டாமை : தென்றா பேசற நீயி , பசுபதி இல்லீனா நாங்க எப்பர்றா நாலு எடத்துக்குப் போயி தீர்ப்பு சொல்லுறது..? போ போயி பசுபதிய கூட்டிட்டு வா. 


த.நாட்டாமை : அப்பிடியே , அந்த சொம்ப எடுத்துட்டு வாடா.!

நா.நாட்டாமை : ( த.நாட்டமையைப் பார்த்து ) டேய் , டேய் அங்க ஒரு ஆல மரம் இருக்குடா , அத நான்தான் மொதல்ல பார்த்தேன் , அதனால நான் தான் மொதல்ல தீர்ப்பு சொல்லுவேன்.!

த.நாட்டாமை : தென்றா பேசற , மொதல்ல ஆளுக்குப் பாதியா பிரிக்கோனும் , அப்புறம் தீர்ப்பு சொல்லுவோம்.! (இருவரும் ஆல மரத்தடிக்கு ஓடுகின்றனர்.!)

சி.குப்தன் : யோவ் , நில்லுங்கய்யா , இங்க வந்து தீர்ப்பெல்லாம் சொல்லவேண்டாம் , இது எமலோகம்.! இங்க எமன் மட்டும்தான் தீர்ப்பு சொல்லுவார்.

த.நாட்டாமை : உனக்கு வேணா எமன் பெருசா இருக்கலாம் , ஆனா தீர்ப்பு நம்பட கைல.!

எமன் : யோவ் , இரண்டுபேருமே செத்துப் போய்த்தான் இங்க வந்திருக்கீங்க..!

நா.நாட்டாமை : தென்றா லூசாட்டமா பேசுற , நான் செத்துப்போயட்டா ஆர்ரா தீர்ப்பு சொல்லுறது.? 

த.நாட்டாமை : நான் சொல்லுவண்டா.!

எமன் : யோவ் , லூசுகலாயா நீங்க , இரண்டுபேருமே செத்துத்தான் இங்க வந்திருக்கீங்க.!

நா.நாட்டாமை : தென்றா மறுக்காலும் மறுக்காலும் அப்படியே சொல்லிட்டிருக்கற , இவன் பதினெட்டு வருஷம் தள்ளி வெக்கரண்டா , இவனோட ஆரும் பேச கூடாது , தண்ணி பொழங்ககூடாது. இதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு.!

த.நாட்டாமை : செல்லாது செல்லாது ,நீ யார்ரா தீர்ப்பு சொல்லுறதுக்கு , நான் தான்டா இங்க நாட்டாமை , நம்பட தீர்ப்புத்தாண்டா செல்லும். இவன கள்ளிப்பால் ஊத்திக்  கொன்னுபோடுங்கடா..! தெங்கடா பசுபதி , வந்ததும் அடிசொட்ட சொல்றா.!

சி.குத்தன் : யோவ் , எமனவே கொல்லச்சொன்ன ஆளு நீதான்யா ..? உன்னைய மொதல்ல எண்ணச்சட்டில போட்டு வறுக்கணும்..!

எமன் : ஐயா சாமி , இவனுகள பிடிச்ச இடத்துலேயே கொண்டு போய் விட்டுரு என்று கூறியவாறே மயங்கி விழுகிறார்.!

பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!


Monday, December 27, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்.! அட விடுங்க ,எத்தனையோ பார்த்துடீங்க இத பாக்க மாட்டீங்களா.?

                                       பதிவர் சந்திப்பில் செல்வா 

  நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வா மத்திய உணவு இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்றார். இவர் சைவம் என்பதால் சைவ உணவு வழங்கப்பட்ட பந்திக்கு சென்று அமர்து கொண்டார்.

  சிறிது நேரத்தில் பந்தி பரிமாறுபவர் கையில் உணவுடன் வந்தார். செல்வாவின் அருகில் வந்த அவர் " கையை எடுங்க " என்றார். 

அதற்கு செல்வா " கையை எடுத்தா சாப்பிட முடியாதுங்க " என்றார் அப்பாவியாக.

" இலைல இருந்து கையை எடுங்க , சாப்பாடு வைக்கணும்.! "

" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா.

" ஐயோ , சாப்பாடு போடுற இலை மேல கைய வச்சு மறைசிருக்கீங்களே , அத எடுங்க " என்றதும் அசடு வழிந்து கொண்டே கையை எடுத்தார்.! 

                                       கணிப்பொறி கற்றுக்கொண்ட செல்வா 

      ஒரு முறை செல்வாவின் வீட்டில் அவரது பெற்றோர் அவரை கணிப்பொறி கற்றுக்கொள் என்று கூறி அவரை ஒரு கணினி மையத்தில் சேர்த்தனர். அதற்கு முன்னர் அவருக்கு கணிப்பொறியில் சில விசயங்கள் தெரியும் என்று அங்கே பெருமையாக கூறிக்கொண்டார்.

  கணிப்பொறி கற்றுக்கொடுக்க வந்தவர் அவரிடம் சில விசயங்களை கூறிவிட்டு இத சேவ் பண்ணிடுங்க என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிதுநேரம் சமாளித்து விட்டு தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

  வீட்டில் சென்றதும் அவரது பெற்றோர் ஏன் நேரத்திலேயே வந்துட்ட என்று கேட்டனர். அதற்கு செல்வா அங்க என்னைய சேவ் பண்ண சொன்னாங்க , நான் ஷேவிங் ரேசர் எடுக்காம போயிட்டேன் , அதான் உடம்பு சரியில்லைன்னு வந்திட்டேன் என்றார் பெருமை பொங்க.!

நீதி : கதைகள் இரண்டும் மொக்கை , ஒன்று மொக்கை ஒன்று சிரிப்பு , இரண்டும் சிரிப்பு ( உங்கள் விருப்பத்தில் நீதி )

நன்றி : ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை சிறந்த முறையில் நடத்திய குழும உறுப்பினர்களுக்கு நன்றி .!


பின்குறிப்பு : நான் தான் சைடுல வடிவேலு படம் போட்டு ஒண்ணு சொல்லிருக்கேனே , அத படிக்காம இத படிச்சிட்டு அழுதா நான் என்னங்க பண்ண முடியும் .?

Wednesday, December 22, 2010

என்னத்த சொல்லுறது.?

முன்குறிப்பு : எல்லோரும் கவிதை எழுதுறாங்க , சரி நாமளும் முயற்சி பண்ணி பாக்கலாம்னு வந்தேன்.! இத படிச்சு உங்க உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.!

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..

ஒவ்வொருமுறை விக்கல் வரும்போதும் உன் நியாபகம் .
நீதான் நினைக்கிறாய் என்கிறது மனது.!
அறிவியல் வளர்ந்தென்ன பயன்..?
யார் எங்கிருந்து நினைக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாமல்.!

"அவ கூப்பிடறா மச்சி " என்றவாறே செல்போனை எடுத்துக்கொண்டு
தனியாகப் போகும் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமைப்படுகிறேன் அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!

ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.! இருந்தாலாவது பயமில்லாமல் காதலித்திருப்பேன்.

இப்பொழுதெல்லாம் பூரியை விட பூரிக்கட்டை
சண்டைகளே என்னை அதிகம் கவர்கின்றது.!
எப்பொழுது நீ என் மீது வீசப்போகிறாய்.?

தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
என்ற வைரமுத்துவின் வரிகளில்தான் எத்தனை உண்மை.?!

என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?

அழகான பெண்களைக் கடக்கையில் மட்டும்
அது நீதானா என சத்தமிடும் மனது
நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!
 
இரண்டு முழ கூந்தல் வைத்திருப்பாயோ இல்லை
பாப் கட்டிங் செய்திருப்பாயோ தெரியவில்லை ,
எப்படி இருந்தாலும் என் தேவதை நீ தான்.!

உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்வேனா ,
இல்லை கல்யாணம் செய்து காதலிப்பேனா தெரியவில்லை.!
நீ சைவமோ அசைவமோ தெரியவில்லை.!
சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை.!
இருந்தாலும் உன்னைக் காணாமலே நித்தமும் ஒரு கற்பனையில்
காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .!

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : நீயெல்லாம் கவிதை எழுதலைன்னு யார் அழுதா.?

நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் ..!

பின்குறிப்பு : நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?

Monday, December 20, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : போன வாரத்துல முல்லா கதைகள் சில படிக்க நேர்ந்தது. சில இல்ல , ஒண்ணு தான். அதுவும் வலைச்சரத்துல நம்ம எஸ்.கே அண்ணன் போட்டது. அவர்கிட்ட கேட்டு முல்லா கதைகள் இருக்குற ப்ளாக் அட்ரஸ் வாங்கினேன். ஆனா ஆணித் தொல்லை காரணமா படிக்க முடியல. இருந்தா கூட அதுக்கு முன்னாடி சில முல்லா கதைகள் , ஜென் கதைகள் படிச்சிருக்கேன். ரொம்ப சிறுசா , ரசிக்கும் படியா இருக்கும். நானும் ரோசிச்சேன் , எத்துன நாளைக்கு முல்லா கதைகள் படிக்கிறது ,அதனால என்னோட மொக்கைகள் சிலத பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தி முல்லா கதைகள் மாதிரி சிறுசா ரசிக்கும் படியா ( அங்க என்ன சிரிப்பு ) நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி எழுதப் போறேன். அதோட முதல் இரண்டு கதைகள் தான் இங்க இருக்குறது.

                                                  அறிவாளி செல்வா

 ஒரு நாள் செல்வா தனது வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

   சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு  போனை கட் செய்தவர் முகத்தில் சந்தோஷ அலை வீசியது. தன் வீட்டில் இருந்து மின்சார வயர்களை எடுத்து தன்மீது போட்டுகொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சினார். 

   மறு வினாடியே மின்சாரத்தால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நண்பருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

    அவரைக்காண வந்த அந்த நண்பர் என்ன ஆனது என்று விசாரித்தார். அதற்கு செல்வா " நீதான நேத்து போன் பண்ணும் போது நான் சரியான டியூப் லைட் அப்படின்னு சொன்ன , அதான் வெளிச்சம் வருதா அப்படின்னு டெஸ்ட் பண்ணலாம்னு கரென்ட் கொடுத்தேன். வெளிச்சம் வரவே இல்ல " என்றார் சந்தோசமாக.!

**********************************************************************************************

                                           கடல் மீன் 

ஒரு நாள் செல்வா தன் வீட்டு மாடியில் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் . அங்கே வந்த அவரது தாயார் " என்ன ஆச்சு , ஏன் சோகமா இருக்க..? " என்றார்.

  அதற்கு செல்வா நேத்து கடல் மீன் வாங்கிட்டு வந்து தொட்டிக்குள்ள விட்டிருந்தேன்ல அது ...!! " 

"ஆமா , அத வளர்க்கலாம்னு சொன்னே , அதான் கொழம்பு வைக்கல , ஏன் கொழம்பு வைக்கணுமா..?" என்றார்.

" இல்ல அது கடல் மீன் தான , அதனால அதுக்கு தொட்டில நீச்சல் தெரியாதுல , நீச்சல் தெரியாம தண்ணில மூழ்கி செத்துடுட்சுனா என்ன பண்ணுறது அப்படின்னு நான் நீச்சல் பழகும் போது வாங்கின டியூப் எடுத்து அது நீச்சல் பழக வரைக்கும் இருக்கட்டும் அப்படின்னு அதோட முதுகுல கட்டி வச்சேன் .! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக.

நீதி : என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! 

பின்குறிப்பு : இனிமேல் நான் சிறுகதை எழுதுறேன் அப்படின்னு சொல்லி நாவல் மாதிரி பெருங்கதைகள எழுதி உங்க உயிரை வாங்குவது கொஞ்சம் குறையலாம். ஏன்னா இந்த மாதிரி கதைகள் அதிகமா எழுதலாம்னு இருக்கேன்.

Thursday, December 16, 2010

ரெஸ்ட் எப்படி எடுக்குறது..?


முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி சொல்லப்பட தினம் ஒரு மொக்கையின் நீட்சி இது.!

    ஒரு வாரம் முன்னாடி எனக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லாம் இருந்துச்சு. அப்போ என்னோட நண்பன் ஒருத்தன் என்னப் பாக்குறதுக்காக வந்தான்.அவனும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு " சரி மச்சி , கிளம்புறேன் , ஒடம்ப பார்த்துக்க , ரெஸ்ட் எடுத்துக்க.! " அப்படின்னு சொன்னான். நானும் " எதுக்கு வீனா செலவு பண்ணுற , அதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வர்ற.? " அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவன் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு " சரி கிளம்புறேன் " அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.

   அவன் போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்க அம்மா எனக்கு டீ கொண்டு வந்தாங்க., வாங்கி குடிச்சிட்டிருந்த போது அவன் நியாபகம் வந்தது. அவன் என்னமோ எடுத்துக்க அப்படின்னு சொன்னான்ல..? நான் ரொம்ப நேரம் அந்த ரூம் முழுசா தேடினேன்.ரெஸ்ட் கிடைக்கல. மறுபடி அவனுக்குப் போன் போட்டேன். " மச்சி , ரெஸ்ட்ட நீயே எடுத்துட்டுப் போயிட்டியா.? " அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவன் " என்னடா ஒளர்ர, நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து ரெஸ்ட் எடுக்கணும்..?" நீதான மச்சி "ரெஸ்ட் எடுத்துக்க அப்படின்னு சொன்ன., நான் ரூம் புல்லா தேடினேன் ஆனா கிடைக்கல , அதான் நீயே மறந்தாப்ல வாங்கிட்டு வந்த ரெஸட கைய்யோட எடுத்துட்டுப் போயிட்டியோன்னு கூப்பிட்டேன்." அப்படின்னு நான் முடிக்கறக்கு முன்னாடி லைன் கட் பண்ணிட்டான்.! அப்பத்தான் எனக்கு புரிஞ்சது அவனேதான் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போய்ட்டான் அப்படிங்கிறது.! அப்புறம் அப்படியே எனக்கு குணம் ஆச்சு.!

    கொஞ்ச நாளுக்கு அப்புறம் அதே நண்பனோட தம்பிக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு, நாம போய் பார்க்கலாம் அப்படின்னு கிளம்பினேன். அப்பத்தான் எனக்கு அவன் நியாபகம் வந்துச்சு ., ரெஸ்ட் வாங்கிட்டு வந்திட்டு திருப்பி எடுத்துட்டு போயட்டான்ல அதைய அவனுக்கு உணர வைக்கணும். அதனால நாமளும் ரெஸ்ட் வாங்கிட்டு போலாம் அப்படின்னு முடிவு பண்ணினேன்.! ஆனா இதுக்கு முன்னாடி ரெஸ்ட் எப்படி இருக்கும்னு பார்த்ததில்லையே.. சரி கடைல கேட்டுப் பார்க்கலாம் அப்படின்னு ஒரு மளிகைக்கடைலே கேட்டேன்.

நான் : அண்ணா ரெஸ்ட் இருந்தா ஒரு அரைகிலோ கொடுங்க .!

கடைக்காரர் : நாங்க ரெஸ்ட் இருந்ததா உனக்கு எப்படி தர முடியும் ..? சரி என்ன வேணும்னு சொல்லு..? 

நான் : அண்ணே , அதான் ரெஸ்ட் தான் வேணும்..! கிலோ எவ்ளோ..?

கடைக்காரர் : ரெஸ்ட்டா , ரஸ்டடா ..? சரியா சொல்லுப்பா..!

நான் : அண்ணே , ரெஸ்ட் தான்.. என் பிரண்ட் ஒருத்தனோட தம்பிக்கு ஒடம்பு சரியில்ல , அவன பாக்க போறேன் ..அதான் அவனுக்காக் ரெஸ்ட் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். அப்படின்னு சொன்னது கடைக்காரர் என்ன ஒரு மாதிரியாப் பார்த்துட்டு அதெல்லாம் இங்க விக்குறது இல்ல., பக்கத்துல துணிக்கடை இருக்குது அங்க கேட்டுப்பாருங்க அப்படின்னு சொன்னனர்.! சரிங்க அப்படின்னு சொல்லிட்டு துணிக்கடைக்குள்ள போனேன். முன்னாடி நின்னுட்டிருந்தவங்க என்னை ரொம்ப மரியாதையா கூப்பிட்டு 

சேல்ஸ்மேன் : என்ன எடுக்கணும் சார்..?

நான் : என் நண்பனோட தம்பிக்கு..? முடிக்கறதுக்குள்ள..

சேல்ஸ்மேன் : பார்க்கலாம் சார் , என்ன வயசு இருக்கு , ஜீன்ஸ் , டீ சர்ட் பாக்குறீங்களா  சார்..! 

நான் : இல்ல , அவனுக்கு ஒடம்பு சரியில்ல , அதான் அவன பக்க போகணும் , ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன்.!

சேல்ஸ்மேன் : எனக்கு புரியலை சார் ..! ரெஸ்ட் இங்க எப்படி எடுக்க முடியும்..? வீட்டுலதானே எடுக்க முடியும்..!

நான் : பக்கத்துக்கடைல சொன்னாங்க , இங்க போனா ரெஸ்ட் எடுக்கலாம்னு அதான் வந்தேன் .!

சேல்ஸ்மேன் : இங்க ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது ., ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு , துணிக்கடைல வந்து ரெஸ்ட் எடுக்கரக்கு இது என்ன சத்திரமா ..? அப்படின்னு கண்டபடி திட்டினார். எனக்கு செம டென்சன் ஆகிடுச்சு. ரெஸ்ட் எங்கயுமே கிடைக்காது போல. சரி இரண்டு ஆப்பிள் வாங்கிட்டு அவன் வீட்டுக்குப் போனேன்.! அங்க போய் அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு " மச்சி ரெஸ்ட் வாங்கலாம்னு கடைல கேட்டேன் , எங்கயுமே கிடைக்கல..துணிக்கடைக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன் , அங்கயும் கொடுக்கல ..அப்படின்னு சொன்னேன் .. அதுக்கு அவன். " நீ எதுக்கு ரெஸ்ட் எடுக்குற , என் தம்பிக்கு ஒடம்பு சரியில்ல அவன் ரெஸ்ட் எடுக்குறான் .! " அப்படின்னு சொன்னான். எனக்கு ஒண்ணுமே புரியல ..!!நீங்களாவது சொல்லுங்க ரெஸ்ட் எடுக்குறதுன என்ன ..? அது எப்படி இருக்கும் .? அத எப்படி எடுக்குறது ..?

நீதி : வழக்கம் போல பாவம் நீங்க .!

பின்குறிப்பு : உங்க ப்ளாக்ல ரெஸ்ட் கிடைக்கும்களா , கிடைக்கும்னா சொல்லுங்க . உங்க ப்ளோக்ல வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன் ..!!


Wednesday, December 8, 2010

மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத்தகவல்.!

முன்குறிப்பு : மொக்கை என்பது சாதாரணமான , கேவலமான விசயமாக பதிவுலகில் பார்க்கப்படுகிறது.! ஆனால் மொக்கையின் பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதால் மொக்கையின் ஆற்றல் விளங்கும். மொக்கை வெறுக்கப்படக்கூடியது அல்ல. அது வரவேற்கப்பட வேண்டியது , போற்றப்பட வேண்டியது.!

பனி படர்ந்திருந்த பின்னிரவு வேளை. நிலா தனது முழு  முகத்துடன் இரவையும் பகலாக்குவேன் என்று சபதமிட்டது போல ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.! அப்பொழுதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தேறியது. நரிகளின் ஊழைச் சத்தத்தில் ஊரே கதிகலங்கியது. நரிச்சத்துடன் நாய்களும் சேர்ந்து கொண்டதால் பெரும் விபரீதம் நடக்கபோகிறது என்பதை குளிரில் நடுக்கியபடியே முனகிய 98 வயதுக்கிழவியின் வார்த்தைகள் சற்று அச்சத்தை ஏற்ப்படுத்தியது. 
          
    ஆந்தைகளும் வவ்வால்களும் ஏற்படுத்திய சத்தத்தில் அச்சமுற்ற ஆட்டுக்குட்டி தனது நான்கு கால்களையும் மைல்கல்லின் மேல் வைக்கும் சாதனையை நிறுத்திக்கொண்டு உடலை சிலிர்த்துகொண்டது.! எதிர்பாராத விதமாக மின்னல் வெட்டி இடி இடித்து மழை கொட்டத்தொடங்கியது.!

            இந்த அத்தனை நிகழ்வுகளையும் புரட்டிப்போட்டது அந்தக் குழந்தையின் அழுகுரல். ஆம் இதோ ஒரு கர்ப்பிணிப் பெண் பத்து மாதம் சுமந்த குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள். அதுதான் மொக்கையா என்று நீங்கள் வினவுவது கேட்கின்றது. தமிழ் திரைப்படத்தின் பல கதாநாயகர்கள் இதுபோன்று பிறந்து விட்டனர். இது போல சப்பயாகப் பிறப்பதற்கு மொக்கை என்ன தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறதா என்ன.? இப்பொழுது பிறந்த அந்தக் குழந்தை ஒரு சாதாரணக் குழந்தைதான்.

         மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுத மகாபாரதத்தை தனது தும்பிக்கையை முறித்து எழுதிய விநாயகரால் கூட இயலாது. அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து அவை தேயும் வரை எழுதினாலும் மொக்கையின் பிறப்பில் 0.000000001 என்ற அளவுதான் முடியும். ஆதலால் தோழர்களே எனது கனவில் தோன்றிய மொக்கையரசர் மொக்கையின் பிறப்பைப் பற்றிய சில வரிகளை எழுதுக என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரது கட்டளையின் படியும்  எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுதும் பாக்கியத்தை அடியேன் பெற்றேன்.!

     மொக்கையின் பிறப்பைப் பற்றி சொல்லவேண்டுமானால் நாம் கற்காலத்திற்கு செல்ல வேண்டும். ஆம் மொழிகளும் , மதங்களும் இல்லாத அந்தக் காலத்திற்கு முன்னதாகவே மொக்கை தோன்றியது. கற்காலத்திலிருந்து சுமார் 2145 வருடங்களுக்கு முன்னாள் மொக்கை என்னும் ஒளி பொருந்திய அற்புதப் படைப்பு புவியில் அவதரித்தது. இது விஷ்ணுவின் முதல் அவதாரத்திற்கு மூன்றாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. அப்பொழுது ஒரு நாள் காட்டில் மிருகங்களை வேட்டயாடிகொண்டிருந்த மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.

      இதோ ஒரு அசரீரி ஒலித்தது. மனிதர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். அதுவரையில் மிருகங்களைப் போலவே கத்திகொண்டிருந்த மனிதர்கள் அந்த அசரீரி குரலை ஒரு சேர உச்சரித்தனர். அந்த அசரீரி ஒலி " மொக்கை " . இதோ மனிதன் பேசத்துவங்கிவிட்டான். அப்பொழுது கரையை நோக்கி வீசிகொண்டிருந்த கடல் அலைகள் உள்வாங்கின. மேலிருந்து கொட்ட வேண்டிய மழை பூமியிலிருந்து மேல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சூரியனைச் சுற்றிகொண்டிருந்த பூமி தனது எதிர்திசையில் சுற்ற ஆரம்பித்தது. பூமியின் ஈர்ப்பு விசை அதிகரித்தது. இதனால் அண்ட சராசரங்கள் பூமியை வளம் வந்தன.
  
      விலங்குகளும் மொக்கை என்ற சொல்லை உச்சரித்தன. ஆம் மனிதன் , விலங்கு என்று பிரித்துப்பார்க்கும் கீழ்த்தரமான எண்ணம் கொண்டதல்ல மொக்கை. மொக்கைப் பொறுத்த வரையில் உயிர்களெல்லாம் ஒன்றே. புல் , பூண்டு , எறும்பு , வைரஸ், பாக்டீரியா என அனைத்தும் பேச ஆரம்பித்தன. உண்மையில் இது ஒரு மாபெரும் புரட்சியே. அதே சமயம் மனிதனைக் கண்டு அஞ்சிய விலங்குகள் இப்பொழுது சமத்துவம் பேசின.!

      வெப்பத்தையே தந்துகொண்டிருந்த சூரியன் குளிரில் நடுங்கியது. இதுவரை " டப் லப் " என்று துடித்துகொண்டிருந்த இருதயம் அப்பொழுதிருந்து " லப் டப் " என்று துடிக்க ஆரம்பித்தது. ஆம் மொக்கை பிறந்து விட்டது. அனைத்து மனிதர்களும் இனம் ,நாடு ,மொழி என்ற பேதம் இன்றி முதன் முதலில் மனிதனால் உச்சரிக்கப்பட்ட சொல் மொக்கை மட்டமே என்று அமெரிக்க இலக்கியவாதி " பாரக் ஒபாமா " சிலப்பதிகாரத்தின் 163 வது அதிகாரத்தில் பாடியுள்ளது நாம் அறிந்ததே.!

  ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தேவர்களும் முனிவர்களும் இறைவனிடம் முறையிட்டனர். முக்கடவுளர்கலான சிவன் , அல்லா , இயேசு ஆகியோர் இந்தப் பிரச்சினையின் வீரியத்தை அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க பூமிக்கு விரைந்தனர். அவர்களால் இரண்டு பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க முடிந்தது. ஒன்று பூமி வழக்கம் போல சூரியனை சுற்றச் செய்தனர். மற்றொன்று மனிதர்களையும் விலங்குகளையும் வித்தியாசப் படுத்தினர். ஆனால் இதயத் துடிப்பின் சத்தத்தை மாற்ற இயலவில்லை. இப்பொழுது புரிகிறதா இதயம் ஏன் " லப் டப் " என்று துடிக்கிறது என்று. ஆம் மொக்கை நமது இதயத் துடிப்பாக இருக்கிறது.!

இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் மொக்கையின் பிறப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுக்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் அளவே என்பதையும் மொக்கையின் பிறப்பினை யாராலும் முழுவதுமாக எழுதிவிட முடியாது என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.மொக்கையின் பிறப்பால் நாம் பெற்ற பயன்கள் சிலவற்றைப் பட்டியளிடவேண்டியது எனது தலையாய கடமை ஆகும். உலக மொழியியல் வரலாற்றில் முதல் முதலில் உச்சரிக்கப்பட்ட சொல் மொக்கை , மனிதன் முதன் முதலாகப் பேச வைத்தது மொக்கையின் பிறப்பே. இதயம் லப் டப் எனத் துடிக்கக் காரணம் மொக்கை. இன்னும் எண்ணற்ற பயன்கள் உள்ளன.!

    இவ்வாறு சர்வ வல்லமை படைத்த மொக்கினை யாரும் துச்சமாக கருத்த வேண்டாவெனவும் , தங்களால் இயன்ற அளவு மொக்கை போட்டு மொக்கையின் வளர்ச்சியில் பங்குபெற வேண்டுமாயும் கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். மேலும் இதே வரிசையில் நான் இதற்கு முன்னர் மொக்கையும் அதன் வரலாறும் என்ற கட்டுரை படைத்துள்ளேன் என்பதையும் நினைவுபடுத்துவதுடன் , இனி வரும் காலங்களில் மொக்கை பற்றிய ஆராய்சிகள் தொடரும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.!


நீதி : மொக்கயுடையான் பதிவிற்கு அஞ்சான்.!

பின்குறிப்பு : இந்தப் பதிவுல வர்ணிப்புகள் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதனால படிச்சுப்பார்த்துட்டு சிரிப்பு வந்தா சிரிப்பு வந்தது அப்படின்னு சொல்லுங்க , சிரிப்பு வரலைனா வரலைன்னு சொல்லுங்க.! அது என் வளர்ச்சிக்கு உதவும்.!


Monday, December 6, 2010

சமகாலக் கல்வி

முன்குறிப்பு : சமகாலக் கல்வி குறித்து தொடர் பதிவு எழுத அழைத்த நம்ம தேவா , எஸ்.கே மற்றும் பாபு அண்ணன்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பதிவில் கூறியிருப்பது அனைத்தும் இன்றைய கல்வியின் நிலையைப் பற்றிய எனது கருத்துக்கள் மட்டுமே. அது தவறாகவும் இருக்கலாம்.!

இன்றைய காலகட்டங்களில் கல்வி என்பது மதிப்பெண்களாலேயே மதிப்பிடப்படுகிறது.
LKG முதல் PG வரை என அனைத்து நிலைகளிலும் மதிப்பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிக மதிப்பெண் வாங்குபவரே அறிவாளி என்ற என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. மதிப்பெண் பெறுவதென்பது அவரவர் நியாபக சக்தியைப் பொறுத்தே அமைகிறது.மேலும் செய்முறைத் தேர்வுகள் பெரும்பாலும் கற்றுத்தரப்படாமல்   அநேக பள்ளிகள் செயல்படுகின்றன. போதிய உபகரணங்கள் இல்லாமை மற்றொரு காரணமாகும்.!

  பள்ளிக்கல்வியைப் பற்றிப் பார்க்கலாம். பள்ளிக்கல்வியைப் பொறுத்த வரையில் தற்பொழுது தனியார் பள்ளி மோகம் பெற்றோரிடம் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும் என்ற எண்ணம் பரவிவருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஒருவித மிரட்டலுக்கு உட்பட்டே பாடங்களை  மனப்பாடம் செய்கின்றனர். பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலேயே எடுப்பதும் , பனிரண்டாம் வகுப்பு பாடங்களை பதினொன்றாம் வகுப்பிலிருந்து எடுப்பதும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது. ஒரே பாடங்களை இரண்டு வருடம் போதித்து மாணவர்களை மனப்பாட இயந்திரமாக மாற்றவும் தயங்குவதில்லை.!

  பொதுவிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் இதுதான் உனது வாழ்க்கை , இந்தத் தேர்வுகள்தான் உனது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்று மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர். பெரும்பாலும் மாணவர்கள் தேர்வுகளில் தோற்றுப்போவதற்கும் இது போன்ற அறிவுரைகள் காரணமாக அமைந்து விடுகிறது. ஏனென்றால் இது போன்ற அறிவுரைகள் அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன. மேலும் தங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் தெருவிலோ அல்லது விளையாடுவதையோ பார்த்தால் " உனக்கு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் , படிக்கறத விட்டுட்டு இங்க என்ன பண்ணுற " என்று அந்த மாணவர்களை எங்கு பார்த்தாலும் அறிவுரை மழை பொழிவதை தவிர்த்தாலே அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.!

  தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டும் அக்கறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை காலை 4 மணிக்கே எழுப்பி படிக்க சொல்லுவதும் , இரவு 11 மணிவரை படிக்கச் சொல்வதும் பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு படிக்கும் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் மனமுடைந்து போகின்றனர். இவர்கள் மாணவர்களிடம் உள்ள அக்கறை காரணமாக இருப்பதைக் காட்டிலும் இந்த வருடம் எங்கள் பள்ளியில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று விளம்பரம் செய்வதற்கே அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் சேர்வதற்கே ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே சேர்த்துக்கொள்கின்றனர். அப்பாடி மதிப்பெண்கள் இல்லாத மாணவர்களிடம் லட்சக்கணக்கில் உதவித்தொகை பெறுவதும் சில பள்ளிகளில் இருப்பதாக செவிவழி செய்தி.! பள்ளிப்படிப்பிற்கே இவ்வளவு நன்கொடையை என்று சற்று ஆச்சர்யமாகவே இருக்கிறது.

  தனியார் பள்ளிகளை குற்றம் சொல்லுவதை விட இன்றைய பெற்றோர்களின் தவறை நாம் பார்த்தால் போதுமானது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகனோ அல்லது மகளோ குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படிக்கின்றனர் என்று கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். மொத்தத்தில் இவர்களது பெருமைக்காக தங்களது பிள்ளைகளை மனப்பாட இயந்திரமாக மாற்றும் பள்ளிகளைத் தவிர்த்தாலே போதுமானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலங்களில் அரசுப் பள்ளிகள் நிச்சயம் சிறந்த கல்வியினை அளிக்கக்கூடியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வரப்போவது தற்போதுள்ள இளைஞர்களே.! நிச்சயம் இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்பட்டே இருக்கும்.!

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
  சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 2.5 வயதிலேயே PRE KG என்ற வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். சிலரைக் கேட்டால் இப்பொழுதிருந்தே பள்ளிக்குச் சென்றால்தான் படித்துப்பழகுவர்கள் என்கின்றனர். இன்னும் சிலர் வீட்டில் செய்யும் குறும்புகளுக்காகவே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்கின்றனர். பொதுவாகவே இந்த வயதில் நிச்சயம் பள்ளிக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. இதிலே சில நல்ல விஷயங்களாகத் தோன்றினாலும் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திருக்குறளை ஒப்பிக்கின்றனர் என்று பெருமைப் பட்டுகொள்வதும் உண்டு. அதைப் பார்த்து சிலர் தங்களது குழந்தைகளையும் திருக்குறள் போன்ற விசயங்களை மனப்பாடம் செய்யச் சொல்வதும் அதற்காக தனிப்பயிற்சி அனுப்புவதும் காணப்படுகிறது. பொதுவாகவே திருக்குறளை ஒப்புவிப்பதிலோ அல்லது வேறு சிலவற்றை மனனம் செய்வதிலோ குழந்தைகளின் அறிவுத்திறனோடு ஒப்பிடாதீர்கள். அதே போல உங்களது பெருமைக்காக சில பெயர்பெற்ற பள்ளிகளில் சேர்ப்பதும் ,  விடுதியில் விடுவதையும் முடிந்த அளவு தவிர்க்கப்பாருங்கள்.மொத்தத்தில் ஏட்டுக்கல்வியை விட உங்கள் வாழ்கைக்கல்வியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்களை விடச் சிறந்த ஆசியர்கள் இருக்க முடியாது.!  

நீதி : நானும் என்னால முடிஞ்சா அளவுக்கு சீரியஸ் ட்ரை பண்ணிப் பார்த்தேங்க , முடியல.! 

பதிவின் முடிவு : இங்க சமகாலக் கல்வி பத்தி எழுத சொன்னாங்க ., ஆனா நான் பள்ளிக்கல்வியப் பத்தி மட்டுமே எழுதிருக்கேன். அதனால இது பற்றி நம்ம எஸ்.கே அண்ணனும் பாபு அண்ணனும் என்னை விட ரொம்ப ரொம்ப நல்லா எழுதிருக்காங்க.போய் பார்த்துகோங்க. இந்தப் பதிவினைத் தொடர மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்களை அழைக்கிறேன் .!

பின்குறிப்பு : எனது ஐம்பதாவது பதிவில் வெறும் பத்து எழுத்துக்களை மட்டுமே கொண்டு நான் செய்த அறிய முயற்சியைப் பார்த்து நமது சௌந்தர் காறித்துப்பியதாலோ அல்லது எனது புதிய முயற்சியைக் கண்டு பலர் எனது ப்ளாக் படிக்கவே பயப்படுவதாலோ இந்த இந்தப் பதிவினை நான் எழுதவில்லை. ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் சில நல்ல(?)  பதிவுகள் எழுதலாம் என்று எண்ணத்தில் இருந்தேன். ஆயினும் எனது கனவில் தோன்றிய மொக்கயரசர் அவ்வாறு எழுதுதல் கூடாது என்றும் , வேண்டுமானால் ஒரு நல்ல பதிவு எழுதிக்கொள் என்று அனுமதி வழங்கியதுடன் ஒரு பொன்மொழியும் அருளிசென்றார். அவர் அருளிய பொன் மொழிதான் மேலே உள்ளது என்பதையும் தெரிவிக்கக்  கடமைப்பட்டுள்ளேன்.! மேலும் அவரது வேண்டுகோளுக்கினங்க அடுத்த பதிவாக மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத் தகவல் என்ற பதிவு வரும் என்பதையும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துகொள்கிறேன்.!

இதையும் படிங்க : 

Wednesday, December 1, 2010