Tuesday, September 27, 2011

மறுபிறவி

முன்குறிப்பு : அதீதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.

எமனுக்குக் கொஞ்சம் கூடக் கருணை என்பதே கிடையாது. எத்தனை எத்தனை உயிர்களை எடுக்கிறான்? எவ்வளவு முக்கியமான நேரத்திலெல்லாம் எள்ளவும் கருணையில்லாம் அமாவாசை இருட்டில் மின்சாரத்தைப் பிடுங்கியதுபோல உயிரைப் பிடுங்குவதில் அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. இதற்கு விதியின் விளையாட்டு என்று பெயர் வேறு. மூடர்கள். எமலோகத்திற்குச் செல்லும் எவரேனும் இதைப்பற்றிப் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நிகழுமா என்ன?

இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமசாமியின் உயிரையும் எடுத்துகொண்டுவிட்டான் அந்தப் படுபாதகன். ராமசாமி அப்படியென்ன தவறு செய்தார்? அட போன் மாதம்தானே தனக்கு 92 வயது பிறந்துவிட்டதென்று வெள்ளைப் பனியனும், பச்சைக் கோமணுமுமாக தட்டில் மிட்டாயுடன் ஊரெல்லம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்குள் இந்தப் பாவியின் பார்வை பட்டுத் தொலைந்துவிட்டது. எல்லாம் விதியென்று சொல்லியே சமாளித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

நம்பியூரில் ராமசாமியைப் பற்றி தெரியாதவறே இருக்க முடியாது. மிகவும் நல்லவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டுமே பக்கத்துவீட்டுக் கோழிகளை லபக் என்று பிடித்துக் குழம்பு வைப்பார். அந்தப் பாவத்தை அடுத்தவருக்குத் தரக்கூடாதென திருடிய கோழி முழுவதையும் தானே தின்று தீர்ப்பார். அட குழம்பு வெந்துவிட்டதா என்று சோதனை கூட அவரேதான் செய்வார். ஒருமுறை தவறுதலாக அவரது மனைவி ஒரு துண்டினை எடுத்து வாயில் போடும்போது பார்த்துவிட்டார். அன்றிலிருந்து திருட்டுக்கோழி சமைப்பதற்கென்றே தனியொரு அறையை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்.

சில சமயங்களில் ஆடுகளையும் திருடுவார். ஆனால் ஏழ்மையான கன்னங்கள், உடல்கள் ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாய் இருக்கும் ஆடுகளென்றால் இவருக்குத் தனிக் கருணையுண்டு. அவற்றை உயிரே போகும் நிலையிலும் திருட நினைக்க மாட்டார்.வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார். அந்தத் தடவலில் சீக்கிரமே கொழுப்பேறி பெரிதாக வளர்ந்து தன் கைக்கு அகப்பட வேண்டும் என்ற கருணை இருக்கும். நல்ல கொழுத்த ஆடுகளென்றால் உடனே அதற்கென நாட்களைக் குறித்துவிடுவார். அதன் கொட்டத்தை அடக்கப்போவதாக இவருக்கு நினைப்பு. அதிலும் அடுத்தவர் வீட்டு ஆட்டின் கொட்டத்தை அடக்குவது அவர்களை அடுக்குவதாகவே எண்ணிக்கொள்வார்.

ஆனாலும் மிகவும் நல்லவர். திங்கள் , சனிக்கிழமைகளில் யாரைப் பற்றியும் அடுத்தவரிடம் புறம் பேசமாட்டார். மற்ற நாட்களில் மட்டும் தான் கேட்ட செய்தியைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்து அடுத்தவர் காதுகளில் போட்டு வைப்பார். அதிலும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யும் நோக்கம் இருக்காது. நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இது போன்ற செய்திகளைப் பரப்புவார். உதாரணத்திற்கு யாரேனும் ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டால் “ அவுங்க ரண்டு பேரும் கூட்டிட்டு ஓடிப் போயிட்டாங்க!” என்று கொஞ்சம் மட்டும் கற்பனை கலந்து சொல்வார். கேட்டால் கற்பனை செய்வது நல்லதென்பார். இப்படி அருமையான மனிதரையும் விட்டுவைக்கப் பொறுக்கவில்லை அந்த எமனுக்கு.

மூக்குப்பொடி என்றால் கொள்ளைப் பிரியம் ராமசாமிக்கு. ஒருமுறை உள்ளூர் மளிகைக் கடையில் கடைக்காரன் ஏமாந்த சமயமாகப் பார்த்து ஒரு டஜன் மூக்குப்பொடி டப்பாக்களை அபேஸ் செய்திருக்கிறார். பீடி , மூக்குப் பொடிக்கெல்லாம் செலவு செய்யக்கூடாதென்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமான ஒன்று. யாரேனும் தெரிந்தவரை வழியில் பார்த்தால் அப்படியே நலம் விசாரிக்கும் சாக்கில் நான்கைந்து பீடிகளை இனாமாக வாங்கி வைத்துக்கொள்வார்.பீடிக்கு அடிமையொன்றும் இல்லை. யாருமே வரவில்லையென்றாலும் கடைக்குப் போய் பீடியெல்லாம் வாங்கிவிடமாட்டார். ஆனால் இதுவரையிலும் அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை வந்ததில்லை. யாரேனும் ஒருவர் ராமசாமி குடிக்க வேண்டிய பீடிகளை வாங்கிக் கொண்டுதானிருக்கின்றனர்.

வீரத்திலும் ஊர் மெச்சும் வீரர்தான். செத்த பாம்புகளை இரண்டடி தூரத்திலிருந்தே கல்லால் அடித்தே கொன்றுவிடுவார். இதுவரை இப்படி எத்தனையோ பாம்புகளைக் கொன்றிருக்கிறார். பாம்புகள் மட்டுமா என்ன? ஒரு முறை வெறி பிடித்த நாயைத் துரத்தியடித்ததே இவரது வீரத்தை இன்னும் பத்துத் தலைமுறைகளுக்குச் சுமந்து செல்லும். அப்பொழுது இவர் ஒரு அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார் அவ்வளவுதான். நூறடி தூரத்தில் வந்த இந்த நாயைக் கண்டு இவர் அலறிய அலறலில் மிரண்டு போய் அந்த பேருந்தின் ஓட்டுனர் தாறுமாறாக வண்டியைச் செலுத்தி அந்த நாய் மீது விட்டுவிட்டார். இவரது சாதுர்யத்தை ஊரே கொண்டாடியது. அவர் புகழ் பாட ஆரம்பித்தால் நொடிகள் மணிக்கணக்கில் உருளும்!

உயிரை எடுத்ததுதான் எடுத்தான், ஒரு பத்து நிமிடம் கழித்தாவது எடுத்துத் தொலைத்திருக்கலாம். சரியாக புதையலப் பற்றிச் சொல்லிமுடிக்கும் முன்பா பெட்ரோல் தீர்ந்து நின்று போன வண்டியைப் போல உயிரைப் பிடுங்கவேண்டும்? எமனுக்குக் கொஞ்சமும் அறிவே கிடையாது. ஒரு பத்து நிமிடம் விட்டிருந்தால் அவனுக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? எல்லாம் கலிகாலம்.

ராமசாமியின் உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவருக்கு அவரது நினைவுகள் அப்படியே இருந்ததுதான் ஆச்சர்யம்.அவர் இறந்துவிட்டதை அவரால் உணர்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது. படங்களில் காட்டுவது போல தன்னை யாரோ இரு கொம்பு முளைத்த அரக்கர்கள் வந்து அழைத்துச் சென்று எமனிடம் விடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. சரி ஒருவேளை இன்று அவர்கள் விடுப்பில் சென்றிருக்கலாம் என்று நினைத்தவாரே எங்கோ பயணிப்பது போலக் கற்பனை செய்துகொண்டார். எப்படியும் எமலோகம் என்பது நிச்சயமாக புகை மூட்டத்துடன் இருக்கும் என்பது அவரது கற்பனை. அதுவரை தூங்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்த போது திடீரென ஒரு குரல். திகைத்துப் போய்விட்டார் ராமசாமி. ” இது எந்த இடம் ? “

” எந்த இடம்னா ? “ குரலின் கேள்வி

“ இல்ல நான் செத்துப் போயிட்டேன். அதான் இது எமலோகமா இல்ல சொர்க்கமா, நரகமா ? “ ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் ராமசாமி.

” எமலோகம் , சொர்க்கம் , நரகம்னுலாம் ஒன்னுமே இல்ல”

“ அப்ப சொர்க்கத்துல ஊர்வசி, ரம்பை , மேனகை எல்லாம் நடனமாடுவாங்கனு சொல்லுறது ? “ எப்போது எந்தக் கேள்வியைக் கேட்பது என்ற விவஸ்தை இல்லாமல் கேட்டுத் தொலைத்துவிட்டார் ராமசாமி.

“ காலம் காலமாக பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் உதித்த மிக மோசமான கற்பனை. அவர்கள் எதற்காக நடனமாட வேண்டும்? இங்கே ஆண், பெண் என்ற பேதமெல்லாம் இல்லை! “

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ராமசாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதையலைப் பற்றி அவரது குடும்பத்திற்கு அறிவிக்கும் வரையில் பூமியில் வாழ அனுமதியளிக்கப்பட்டது.

அன்றைய தினத்தின் எல்லா உயிர்களும் பிறந்திருந்தன. ஒரே ஒரு ஆட்டைத் தவிர!

அன்று இரவு நம்பியூருக்கு அருகில் இருந்த மற்றொரு ஊரான செவியூரில் ஒரு வளமான குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஆடொன்று மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. அதில் ஒரு குட்டியாக நமது ராமசாமி பிறந்திருந்தார். என்னதான் ஆட்டுக் குட்டியாகப் பிறந்திருந்தாலும் ராமசாமிக்கு அவரது பழைய நினைவுகள் அழிக்கப்படாமலும் தான் புதையலைப் பற்றிய செய்தியை தனது குடும்பத்திற்கு எடுத்துக் கூறாவே வந்திருப்பதும் ஞாபகத்தில் இருந்தது. தனது சகோதரர்களான மற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பார்த்தார். ஒருவேளை அவர்களும் மறு ஜென்மமோ என்று நினைத்தவர் சரி போகப் போகப் பேசிப் பழகிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது அந்த ஆட்டுக்குட்டி.

நாட்கள் நகர்ந்தன. ராமசாமி என்ற மனிதர் ஆட்டுக்குட்டியாக மறுபிறவி எடுத்திருப்பதை யாருமே கண்டுகொண்டதாகவோ அல்லது அதை நினைத்து ஆச்சர்யப்பட்டதாகவோ தெரியவில்லை. ராமசாமிக்கு நம்பிக்கை இருந்தது. யாரேனும் ஒருவருக்காவது தான் தான் ராமசாமியின் மறுபிறவி என்று தெரிவிக்கவேண்டும் என்று பலவாறு சிந்திக்கலானார். என்னதான் ஆட்டுக்குட்டியாகப் பிறந்திருந்தாலும் அவரது மனம் மனித மனமல்லவா ? அவரால் ஆட்டுக்குட்டியின் அன்றாட நடவடிக்கைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை. ஒரே இடத்தில் மலம்,ஜலம் கழிப்பது அவருக்குப் பெரிய அருவருப்பை உண்டாக்கியது. ஆட்டுப் புழுக்கை அவ்வளவு துர்நாற்றம் இல்லாவிட்டாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார். பின்னர் புல்லை மேய்வது , ஓய்வு நேரத்தில் அதை லாவகமாக வாய்க்குக் கொண்டுவந்து அசை போடுவது என்று பல வேலைகளைக் கற்றுக்கொள்ள மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது. இவர் மனிதனாக இருந்தபோது ஆடுகளைப் பார்த்து “ இதுகளுக்கு என்ன திங்க வேண்டியது, தூங்க வேண்டியது. வேற என்ன வேலை இருக்குது?” என்று திட்டியது ஞாபகம் வரவே அதைத் தவறென உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொள்ள நினைத்து கைகளைத் தூக்கினார். முன்னிரு கால்களும் நிலத்தில் டொம் என்று அடித்து வலியை உண்டாக்கியது.

எத்தனையோ முயற்சிகளைச் செய்துபார்த்தார் ஆடாகிப்போன ராமசாமி. ஒன்றும் பலிக்கவில்லை. கடைசிக் கட்ட நடவடிக்கையாகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டார். இருந்தும் ஒருவகையில் பயமாக இருந்தது. ஒருவேளை தான் வாயைத் திறந்து பேசி, பேசும் ஆடென்று யாரேனும் சர்க்கசுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வதென்றும் ஒரு புறம் பயமாக இருந்தது. அந்த பயத்தினால்தான் இத்தனை நாட்களாகப் பேசமால் வேறு வழிகளில் முயன்று கொண்டிருந்தார். என்ன செய்வது ? வேறு வழியில்லையே! எனவே வாயைத்திறந்து தான் யாரென்பதையும் எதற்காக பூமிக்கு வந்திருக்கிறேன் என்பதையும் சொல்லிவிடவேண்டுமென நினைத்தார்.

அன்று விடிந்ததும் ராமசாமி தான் பேச வேண்டியதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி மனப்பாடம் செய்துகொண்டார். என்ன ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே இந்த முடிவிற்கு வந்திருந்தார். ஆனால் தான் பேசுவதால் தன் கொம்பை முறிக்கும் அளவுக்கு இப்படியொரு ஆபத்து வருமென்று கருதவில்லை. காலையில் வழக்கம்போல ஆட்டுப்புழுக்கைகளை அள்ளுவதற்காக ஆட்டின் சொந்தக்காரர் வந்திருந்தார். அவரிடம் நைசாக காதுகளில் சொல்லிவிடலாம் என்று நினைத்த ராமசாமி அவரின் காதருகில் சென்று “ என் பேரு ராம்சாமி , நான் போன ஜென்மத்துல நம்பியூர்ல இருந்தேன். ஒரு புதையல் பத்தி சொல்லுறதுக்காகத்தான் மறுபடி பொறந்து வந்திருக்கேன். நீ மட்டும் என்ன அங்க கொண்டுபோய் விட்டா உனக்கும் புதையல்ல பாதி குடுக்கச் சொல்லுறேன்! “ என்று சொன்னார். ஆனால் வெளியில் “ மேஏஏஏஏ” என்ற சத்தம்தான் வந்தது. ஆடு வளர்ப்பவரின் காது ஜவ்வு பிய்ந்து போனது போல ஆகிப்போனது. பக்கத்திலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தன்னால் முடிந்த மட்டும் ராமசாமியாகிய ஆட்டை அது ராமசாமி என்ற தெரிந்துகொள்ளும் ஆர்வமின்றி அடிக்கலானார். அந்த அடியில் ராமசாமியின் முன்பிறவியில் இல்லாத வசதியான கொம்புகளில் ஒன்று முறிந்து போயிற்று.

ஆனால் அந்தக் கத்தலில் ராமசாமிக்கு அவருக்கே தெரியாத நன்மை வரும் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது காட்டுக்கத்தலில் காது ஜவ்வு கிழிந்துபோன ராமசாமியின் முதலாளி அவரை விற்றுவிடுவதென்று முடிவுக்கு வந்திருந்தார். அந்த வாரத்தில் ஒருநாள் ராமசாமி சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராமசாமியின் போன ஜென்ம ஞாபகத்தின்படி இது ஆட்டுச் சந்தை என்பதை அறிந்து கொண்டார். ராமசாமிக்குத் திடீரென ஒரு பயம் வந்தது. ஒருவேளை தன்னை யாரேனும் கசாப்புக் கடைக்கு வாங்கிச் சென்றுவிட்டால் தான் வந்த லட்சியம் என்னாவது என்று கண்ணீர்வடித்தார். ராமசாமிக்கு நொடிக்கு நொடி பயமாக இருந்தது. அப்பொழுதுதான் ராமசாமியின் ஊரில் கசாப்புக்கடை வைத்திருக்கும் ஒரு வியாபாரி வந்து ராமசாமியின் விலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ராமசாமி முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார். எப்படியும் தன்னை அந்த கசாப்புக்கடைக்காரன் வாங்கிச் சென்றுவிடுவான் என்று பயந்து நடுங்கினார். போன ஜென்மத்தில் திருடித் தின்ற ஆடுகள் , கோழிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. இருந்தாலும் கடைசியாக ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று பேசுவதற்காக முயற்சித்தார். இந்த முறையும் ”மேஏஏஏஏ” தான். ஒரு ”ஜூன்” கூட வரவில்லை. ராமசாமியின் கடைசி முயற்சியும் தோல்வி. ஆனால் கடவுள் அவரைக் கைவிடவில்லை. கசாப்புக்கடைக்காரன் விலை படியாமல் போய்விட்டான். பெருமூச்சு விட்டுக்கொண்டார் ராமசாமி. அப்போது அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் நடந்தது. ராமசாமியின் போன ஜென்மத்து மகன் அங்கே வந்துகொண்டிருந்தான். சொல்லிவைத்தாற்போல அவரசர அவசரமாக ராமசாமியை விலைக்கு வாங்கிக்கொண்டு அவரின் புது ஓனராகிக்கொண்டான்.

ராமசாமிக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் தனது மகனைப் பாசத்துடன் தழுவிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போகவே அவனது கால்களை லேசாக நக்கினார். ஆட்டின் வடிவில் இருப்பது தன் தந்தை என்று அறியும் ஆர்வமில்லாத அந்த முட்டாள் மகன் அவரை கயிற்றில் கட்டி இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.என்னதான் ஆடென்றாலும் தன்னைத் தன் மகனே கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதை நினைத்து வெட்கப்பட்டார் ராமசாமி. அதை விட வேறென்ன செய்யமுடியும் அவரால் ? இருந்தாலும் வீட்டிற்குச் சென்றதும் எப்பாடு பட்டேனும் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டார்.

ராமசாமியைக் கூட்டிக்கொண்டு நேராக புதையல் இருக்கும் இடத்திற்குச் சென்றார் அவரது மகன். ராமசாமிக்கு ஆச்சர்யம். எப்படி நாம் நினைப்பது போலவே இவன் நடந்துகொள்கிறான்.? ஒரு வேளை நாம் மறுபிறவி என்பதை இவன் அறிந்துகொண்டானோ என நினைத்து மறுபடியும் அவனது காலை நக்கினார். இந்த முறை ஒங்கி அறைந்து விட்டான் அவரது மகன். ராமசாமிக்கு மறுபடியும் குழப்பம். சரி ஆனது ஆகட்டும் என நினைத்துக் கொண்டு அவனது பின்னே ஆடாகவே சென்றுகொண்டிருந்தார் ராமசாமி.

புதையில் இருக்கும் இடத்தை அடைந்ததும் அங்கே சிலர் குழி தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ராமசாமிக்கு அதிர்ச்சி. எப்படி தனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இவர்களுக்குத் தெரிந்தது? அதையெல்லாம் விடுத்து இதை எடுப்பதற்கு எதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறார்கள்? குழப்பத்தில் இருந்த ராமசாமிக்கு “ ஏன்டா ஆடு வாங்கிட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா ? சீக்கிரமா வெட்டி தலைய உள்ள போடுங்க. பலி குடுத்துட்டுத்தான் புதையல வெளிய எடுக்கனும்! “ என்ற அவரது மற்றொரு மகனின் குரலைக் கேட்டுப் பதறிப்போனார். உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. இப்போது பதறி என்ன செய்வது ? ஆடாக இருந்தாலும் உயிர் பயம் இல்லாமலா இருக்கும் ? எப்படித் தப்பிப்பது என்று சிந்திப்பதற்குள் அவரது ஆட்டுருவத்தின் தலை தனியாக குழிக்குள் வீசப்பட்டது.

இந்த முறையும் ராமசாமியின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒன்றை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ஆடுகள் ஆடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆடுகள் தாத்தாக்களாகப் பார்க்கப்படுவதில்லை!

Monday, September 19, 2011

நேர்த்திக் கடன்

இப்படியொரு வினோதமான வேண்டுதலை திட்டமலை முருகப்பெருமான் அவர் பிறந்ததிலிருந்து கண்டிருக்க மாட்டார். எங்களூருக்குப் பக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம்தான் இந்த முருகன் கோவில். அதிக உயரம் என்றும் சொல்ல முடியாது, குட்டை என்றும் சொல்லிவிட முடியாது. அளவான 90 படிகள் மட்டுமே கொண்ட மலை. நெட்டை, குட்டை என்றதும் அடுத்து ஒல்லியா, குண்டா என்று கேட்காதீர்கள். ஒல்லியாக இருப்பதற்கு அது என்ன ஏணியா ?  அதெல்லாம் குண்டுதான். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. ராமாயண காலத்தில் அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோனபோது சிதறி விழுந்த துண்டுதான் இந்த மலை என்று பேசிக்கொள்கிறார்கள். அது உண்மையா இல்லை யாரேனும் புழுகினிச்சித்தர் திரித்துவிட்ட கட்டுக்கதையா என்று தெரியவில்லை. ராமன், ராவணன், அனுமன் சண்டை ஒருபுறமிருக்க முருகன் எப்படி இதன் மேல் ஏறிச் சொந்தம் கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. எப்படியோ நில அபகரிப்புப் புகார் எழாமல் இருந்தால் சரிதான்.

அனேகமாக இந்தக் கோவிலுக்கு முருகன் வந்தது திருவிளையாடல் நடந்த காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். திருவிளையாடல் என்றதும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த ஸ்ரேயாவைப் பற்றி கற்பனை செய்துகொண்டிருக்காதீர்கள். நான் சொல்லவந்த திருவிளையாடல் ஞானப்பழத்தால் பரமசிவன் குடும்பம் பிரிந்து முருகன் பழநிமலைக்குக் குடிவந்தாரல்லவா அந்தக் காலம். அப்பொழுதுதானே குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்ற வரம் கொடுக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஒரு சண்டை அவர்கள் குடும்பத்தில் வராமலிருந்து இந்த மலையில் முருகன் எழுந்தருளாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் இப்படிப் புலம்பியிருக்கத் தேவையிருந்திருக்காது. யார் கண்டார்கள்? இது இல்லாமலிருந்தால் என் விதி வேறு வழியில் விளையாடியிருக்கும். என் போன்ற இளிச்சவாயர்கள் வாழ்க்கையில் விளையாடுவதில் இந்த விதிக்கு அப்படி என்ன சந்தோசமோ தெரியவில்லை. இங்கிலாந்து சென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்குத் துணையாக விளையாடியிருந்தாலாவது ஏதோ ஒரு போட்டியிலாவது ஜெயித்திருப்பார்கள், முட்டாள் விதிக்கு அதெல்லாம் எங்கே தெரிகிறது?

எங்கள் ஊரில் எல்லோருக்குமே இந்தக் கோவிலின் மீது அளவுகடந்த பக்தி. நானும் பக்தியுடன்தான் இருந்திருப்பேன் என் வாழ்வில் அப்படியொரு சதி நடந்திருக்காவிட்டால்! அந்தக் கோவிலின் பேச்சை எடுத்தாலே கோபம் கோபமாக வருகிறது. முருகன் மீது மட்டுமல்ல அனுமார் மீதும் கோபம்தான். ஒரு வேலையைக் கொடுத்தால் ஒழுங்காகச் செய்யாமல் இப்படியா ஊரெல்லாம் ஒழுக விடுவது? இருந்தாலும் வாராவாரம் சனிக்கிழமை கிடைக்கும் ஆஞ்சனேயர் கோவில் பிரசாதம் அமிர்தமாக இருக்கும். அது என்னவோ தெரியவில்லை இந்தக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம் போல் உலகமெங்கும் சுற்றினாலும் கிடைக்காது. சீச்சீ.. இதென்ன ? எதிரி வீட்டுச் சாப்பாட்டைப் புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டேன். முதலில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். சாப்பாடாம் பெரிய சாப்பாடு. இந்தக் கடவுளர்கள் செய்த துரோகத்துக்கு ஏழு ஜென்மம் உட்கார வைத்து உபசரித்தாலும் ஈடாகாது.

108 முறை மொட்டை அடிக்கவேண்டுமென்பது அவ்வளவு எளிதா என்ன? வருடம் ஒரு மொட்டை என்று கணக்கிட்டாலும் 108 வருடங்கள் ஆகிவிடுமே? வருடம் ஒரு முறை வரும் தை மாதத் தேர்த்திருவிழாவில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டுமாம். ஒரு முறை மொட்டையடித்துவிட்டால் மீண்டும் பழைய நிலையை அடைய எப்படியும் 6 மாதம் பிடிக்கிறது.வருடம் இரண்டுமுறை மொட்டை அடித்தாலும் 54 வருடங்கள் ஆகுமே! 54 வயதுவரை மொட்டையாகவே வாழவேண்டுமா? அறிவியல் வளர்ந்தென்ன பயன்?மொட்டையடித்தவுடன் முடி வளர்ந்துவிடும் அளவுகூட நாம் இன்னும் முன்னேரவில்லையே ? இந்த லட்சணத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் எங்கே செவ்வாய்க்கெல்லாம் போகப்போகிறார்கள்?

பள்ளிப்பருவம் வரை எனக்கு இதொன்றும் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. என் நண்பர்கள் மட்டும் கிண்டல் செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் அழகழகான பட்டப்பெயர்கள். எனக்கு மட்டும் மொட்டத்தலையன் என்ற பெயரே எப்பொழுதும். இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. ஒரே ஒருமுறை மட்டும் உள்ளூர்ப் பிரச்சினை காரணமாக இரண்டுவருடம் தேர்த்திருவிழாவை நிறுத்திவைத்துவிட்டார்கள். அப்பொழுதெல்லாம் மிக்க அவமானமாயிருந்தது. பெண்களைப் போல ஜடை போட்டுக்கொண்டு , ஐயையோ! அதை நினைக்கவே வெட்கமாயிருக்கிறது. சில சமயம் நண்பர்கள் அதில் பூவை வேறு வைத்துவிடுவார்கள். நான் ஆணா இல்லை பெண்ணா என்று ஆசிரியரே ஒரு முறை குழம்பிப்போனார். அந்தச் சமயத்திலெல்லாம் ஊர்த்தலைவரின் மீது கடுங்கோபமாக இருந்தேன். ஒருமுறை கல்லைக்கொண்டு அவரது மண்டையை உடைத்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் வழக்கம்போல வருடா வருடம் திருவிழா நடக்கிறது. நானும் வருடாவருடம் மொட்டை அடித்துக்கொண்டுதானிருக்கிறேன்.

நாட்கள் மொட்டையாகவே நகர்ந்தன. மீசை அரும்பத் தொடங்கியிருந்த காலத்தில் இது மிகக் கஷ்டமென்றும் சாபமென்றும் எண்ணத் தொடங்கினேன். என் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட என் நண்பன் வசந்து ஒரு யோசனை சொன்னான். “ 108 மொட்டை நீ அடிக்கனும் , அவ்ளோதானே? பேசாம மலையடிவாரத்துல ஒரு சலூன் கடை ஆரம்பிச்சு மொட்டையடிப்பதற்கு இலவசம்னு போர்டு போட்டுட்டா எப்படியும் ஒரு வாரத்துல முடிச்சிடலாம்” என்றான். எனக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது.

முருகக்கடவுளும் அவ்வளவு பெரிய அறிவாளியொன்றும் கிடையாது. போனவாரம் ராமசாமி மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டதை நம்பி அவனது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். போயும் போயும் முழுச்சொட்டையான அவனது வேண்டுதலை எப்படி நம்பினார். அவன் மொட்டையடிப்பதற்கு அவன் தலையில் அப்படி என்னதான் இருக்கிறது? கடவுள் இவ்வளவு முட்டாளாகவா இருப்பது? சரி எப்படியோ அவர் முட்டாளாக இருப்பது எனக்கும் நல்லதென்றே பட்டது.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து எங்கள் வீட்டில் இதைப்பற்றிச் சொன்னேன். பதறிப்போனார் எனது தாயார். “ மனுசன ஏமாத்தறதே தப்பு சாமி, இதுல சாமிய ஏமாத்துனா என்னாகுறது ? உனக்கு மொட்டையடிக்கிறதாதான் நேந்துக்கிட்டென், நீ மொட்டையடிக்கிறதா இல்ல!அப்படியேதும் குத்தம் நடந்தா அந்தக் கொறையப் போக்க மறுப்டி எத்தன மொட்டையடிக்கிறது?“ என்று புலம்பியழத்தொடங்கினார்.

அவளின் அழுகை கூட என்னைப் பாதிக்கவில்லை. ஒருவேளை இப்படி ஆரம்பித்து இது தெய்வகுத்தம் என்று சொல்லி மீண்டும் முதலிலிருந்து 108 மொட்டைகள் அடிக்கவேண்டுமென்று சொல்லிவிட்டால் ? நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது. பின் அந்த ஆசையைக் கைவிட்டுவிட்டேன்.

இந்த மொட்டையடிக்கும் வேண்டுதலில் கடவுளை மட்டும் திட்டிப் பயனில்லை. ஏன் கடவுளைத் திட்டுவதே தவறு. இதற்கெல்லாம் காரணம் என் அம்மாவும் அப்பாவுந்தான். மணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையே இல்லையாம் இவர்களுக்கு. எத்தனையோ கோவில் குளமென்று சுற்றியும் பயனில்லையாம். மிக மனவருத்தமடைந்து தங்களுக்குக் குழந்தை பிறந்தால் இந்தக் கோவிலில் 108 மொட்டைகள் அடிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டார்களாம். அடுத்த பத்தாவது மாதத்தில் மொட்டையடிக்கச்சொல்லி தலையை நீட்டிகொண்டே நான் பிறந்துதொலைத்துவிட்டேன் போலும். என்ன அராஜகம் இது ? என் அனுமதியில்லாமல் இப்படியொரு வேண்டுதலா ? கடவுளின் பெயரை வைப்பது, மணி வாங்கிக்கொடுப்பது, படி கட்டுவதென்று வேண்டித் தொலைக்கவேண்டியதுதானே ?  அட இதை விடுங்கள். இவர்களுக்குத்தான் புத்தியில்லை.இந்தக் கடவுளுக்குமா புத்தியில்லை. 108 மொட்டையென்றதுமே பல்லை இளித்துக்கொண்டு என்னை இங்கே பிறப்பித்துவிட்டார் போலும். முடியாசை பிடித்த கடவுள்!

கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மொட்டையடிப்பதின் கொடுமையை முழுமையாக உணர்ந்தேன். எப்பொழுதும் மொட்டையாகவே இருப்பதால் ஏனோ வில்லன்களைப் பார்ப்பது போலவே என்னையும் பார்த்தனர். கருமம் பிடித்த திரைப்பட இயக்குனர்கள் வேறு வில்லன்களை மொட்டையாகவே காட்டித்தொலைக்கின்றனர். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. பெரும்பாலான வில்லன்கள் ஜடையுடன் திரிகிறார்கள். இதுமட்டுமா இந்தக் கல்லூரிப் பையன்கள் வேறு விதவிதமாக கட்டிங் செய்வதும் கலரடிப்பதுமாக வெறுப்பேற்றுகின்றனர். நான் எங்கே கலரடிப்பது? அட இதைக் கூட விட்டுவிடலாம். இந்தக் கணக்கு விரிவுரையாளரெல்லாம் பாக்கெட்டில் சீப்புடன் திரிவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருக்குத் தலையில் வெறும் நாற்பத்தியிரண்டே முடிகள் தான். தோரயக்கணக்கெல்லாம் இல்லை. துல்லியமான எண்ணிக்கைதான். இரண்டு நாடகளுக்கு முன்னர் எண்ணிவிட்டேன். இன்று ஒன்றிரண்டு குறைந்திருக்கலாம். பஸ் ஸ்டாண்டில் சீப்பு விற்கும் பையன் கூட என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாகவே தோன்றுகிறது. எனக்கும் ஒரு நாள் முடிவளரும் என்று அவன் சட்டையைப் பிடித்துக் கத்தவேண்டும் போலத் தோன்றும்.

நான் பெற்ற இந்த அவமானங்கள் என் எதிரிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. என் குழந்தைகளுக்கு முழம் முழமாக முடிவளர்த்து அழகு பார்க்கவேண்டுமென்று தோன்றியது. அப்பொழுதுதான் பகீரென்று ஒரு பயம். ஒருவேளை என் வாழ்நாள் முழுவதும் கூடி இந்த 108 மொட்டைகளை அடிக்கமுடியாமல் போயிவிட்டால்? எனது மிச்ச மொட்டைகள் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்குச் சென்றுவிட்டால் ? ஆண் குழந்தையென்றால் பரவாயில்லை. பெண் குழந்தையென்றால் நினைத்துப்பார்க்கவே கூசுகிறது. சொத்துச் சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை மொட்டைகளையா சேர்த்துவைத்துவிட்டுப் போவது?

இந்த எண்ணம் வந்தவுடனே இதோ முருகனைப் பார்க்க ஓடோடி வந்துவிட்டேன். இன்று இந்த நேர்த்திக்கடனுக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் என் சந்தததியே மொட்டையாக அலைய வேண்டியதுதான்.

இங்கே நிற்பவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல். ஒருவருக்கு வேலை வேண்டுமாம், இன்னொருவருக்கும் கல்யாணம் வேண்டுமாம், இன்னொருவருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு வேலைவாய்ப்பு அலுவலகம் , ஒரு கல்யாண புரோக்கிங் அலுவலகம் என்று முருகனுக்குக் கீழ் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அலுவல்கள் நடந்துகொண்டிருக்கிறது. என் வயதுப் பையன்கள் எல்லோரும் ஒரு நல்ல காதலி வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் அந்த வேலையை ஆரம்பித்தது போல எதிரில் நிற்கும் பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தனர். எனக்கு இதிலெல்லாம் ஆசையே இல்லை. என் சிந்தனை , செயல் லட்சியம் எல்லாமே இந்த மொட்டைகளை எப்படியாவது என் வாழ்க்கை முடிவதற்குள் அடித்து முடித்துவிடவேண்டுமென்பதே.

என் வேண்டுதல் உண்மையில் வினோதமானதுதான். எல்லோருமே தங்களுக்கு இது நடந்தால் இதைச் செய்கிறேன் என்றே வேண்டிக்கொண்டிருந்தனர். எனது வேண்டுதல்களெல்லாம் ஏற்கெனவே வேண்டிக்கொண்டதை திருப்பி வாங்கிக்கொள்ளச் சொல்லி வந்திருக்கிறேன். ஆம் 108 மொட்டைகள் என்ற நேர்த்திக்கடனிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லியே வந்திருக்கிறேன். இதற்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை. இதற்கு என்னவென்று நேர்ந்துகொள்வது ? எல்லாவற்றிற்குமே நேர்ந்துகொண்டால்தான் வரம் கொடுத்துத் தொலைகிறார்கள் இந்தக் கடவுளர்கள். முதலில் வரம் கொடுக்கும் அதிகாரத்தை அவர்கள் கையில் இருந்து புடுங்கி ஏதேனும் பொது மனிதனிடம் கொடுக்கவேண்டும். வேண்டாம் வேண்டாம். அவர்கள் எல்லா வரத்தையும் எடுத்து சுவிஸ் வங்கிகளில் போட்டாலும் போட்டுத் தொலைத்துவிடுவார்கள்.

மொத்தத்தில் நான் இதுவரை 18 மொட்டைகளை அடித்துவிட்டேன். இதை வைத்துக்கொண்டு அந்த மிச்சமுள்ள 90 மொட்டைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுதல். இதற்கு பதிலாக நான் என்ன செய்வது ? காவடி எடுக்கலாமென்றால் ஒருவாரத்திற்கு பட்டினி இருக்கவேண்டுமாம். அது என்னால் முடியும் காரியமில்லை. சரி ஏதாச்சும் வேல் வாங்கிக் கொடுக்கலாமென்றால் உலோகப் பொருட்களின் விலை வேறு தாறுமாறாக ஏறிக்கொண்டுள்ளது. இந்தச் அரைக்காசு பெறாத வரத்திற்கு எதற்கு அத்தனை செலவு செய்யவேண்டும்.

ஆனால் முருகன் ஒன்றும் அவ்வளவு அறிவாளி இல்லையென்றாலும் முருகன் இப்போதுள்ள வேலைப்பளுவில் எனது வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாரா என்று தெரியவில்லை. அதனால்தான் இதோ இப்பொழுது முருகனிடமிருந்து அவரின் அண்ணன் விநாயகரிடம் வந்துவிட்டேன். இவரிடம் தான் எனது குறையை சொல்லி அந்தப் பிரச்சினையிலிருந்து விடுதலை பெற்றுத்தரச் சொல்ல வேண்டும். அண்ணனும் தம்பியுமென்றாலும் இவருக்கு யாருமே மொட்டையடிப்பதில்லை என்ற கவலை இல்லாமலா இருக்கும். அதனால்தான் இவரிடம் இப்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன். “ முருகனுக்கு அடிக்கிற 90 மொட்டைல இருந்து என்னைய காப்பாத்தினா அடுத்தவருச தேர்த்திருவிழாவுல உனக்கு ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்” இப்பொழுது பாருங்கள் முருகனை எப்படியாவது இவர் ஏமாற்றித்தான் விடுவார். ஞானப்பழத்தைப் பெருவதற்காக இவர் செய்த தந்திரம்தான் நமக்கு முன்னரே தெரியுமல்லவா?


பின்குறிப்பு : இலக்கியத்தின் மீதுள்ள ஆசையால் எனது முதல் முயற்சி இது. குறையிருப்பின் தவறாமல் சுட்டுங்கள்.