Wednesday, August 8, 2012

வரிக்குதிரையின் கதை!

திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.

வரிக்குதிரை பிறந்த கதைக்கும் திரேதா யுகத்தில் நான் பிறந்ததற்கும் ஒரு நீண்ட நெடும் வரலாற்றுத் தொடர்புண்டு.

திரேதா யுகத்தின் மார்கழி மூன்றாம் நாள் அர்த்த ஜாமத்தில் பூமியே அதிரும்படியான ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. அப்படி ஒரு அழுகையை இது வரையிலும் இப்பூவுலகம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. காட்டில் ஒன்றோடொன்று சண்டையிட்டு கண்களில் தீ ஜுவாலையைக் கக்கிக்கொண்டிருந்த இரு சிங்கங்கள் இந்த அழுகையைக் கேட்டுத் தத்தமது கோபத்தை மறந்து பயத்தில் நடுநடுங்கின.இருள் கூட விரைவாக ஓடி விட வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டது. ஆம் அப்பொழுதுதான் கடவுளின் முதல் குழந்தையாக நான் பிறந்திருந்தேன்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தேன். என் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்று கூறுவது இங்கு சிறந்த உதாரணமென்றாலும் கடவுளின் குழந்தையாகப் பிறந்துவிட்டதால் அசுரவேகம் என்பது இப்பொழுது மட்டும் சரியாகாது.

எனக்கு 3 வயதிருக்கும் போது LKG அனுப்பத்திட்டமிட்டிருந்தார் எனது தாயார். ஆனால் அப்பொழுது அந்த வசதியில்லாமற் போகவே 5 வயதாயிருக்கும்போது எங்கள் நாட்டிலிருந்த சிறந்த ஒரு குருவிடம் கல்வி கற்பதற்காக அனுப்பினார்கள் என்னை.

முதல் நாள் எனது குருகுல வாசம் மிகச்சிறப்பாகவே இருந்தது எனக் கூறலாம். ஆனால் இது நடந்து கோடான கோடி வருடங்களாகிவிட்டதால் என்னால் சரியாக நினைவுபடுத்திக் கூற இயலவில்லை.அப்பொழுது ஜுனியர் ஹார்லிக்ஸ்சும் இல்லாததால் நான் TALLER,STRONGER,SHARPER ஆவதற்கான வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்படவில்லை.

இரண்டாம் நாள் என் குருகுலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் வரிக்குதிரை என்ற ஒரு புதிய இனம் உருவாகக் காரணமாயிருந்தது. ஆம் நான் சரியாக வீட்டுப்பாடம் எழுதாதைக் கண்டு என் குலகுரு அவரது கண்களை வியாழன் கோள் அளவு பெரிதாக்கி அதனைச் செவ்வாய்க் கோள் போலச் சிவக்க வைத்து என் முதுகில் ஓங்க ஒரு குத்து விட்டபடியே கேட்டார்“ஏன்டா TWO RULE,FOUR RULE எழுதல?"

அப்பொழுது “ TWO RULE " என்ற ஒரு வகையான நோட்டுப்புத்தகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அந்த அப்பாவி ஆசிரியர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த அடிதான் வரலாற்றில் ஒரு புதிய உயிரினத்தையும் உருவாக்கும் என்பதையும் அறியாமல் கோபக்கனல் தெரிக்க என்னைப் பார்த்துகொண்டிருந்தார்.

நான் அழுதுபுரண்டு கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென எனது தந்தையான கடவுளிடம் முறையிட்டேன். ஆனால் சாந்த சொரூபமான , கருணையே உருவான அவர் சொன்னார் “ ஆசிரியரை அடிக்க நினைப்பது பெருங்குற்றம். ஒருகாலும் நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.காலையில் உனக்கு வரி போட்ட நோட்டு வாங்கித் தருகிறேன் ” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

மறுநாள் காலையில் நானும் எனது தந்தையும் வரிப்போட்ட நோட்டிற்காய் உலகெங்கும் வலம் வந்தோம். கிடைத்தபாடில்லை. கடுங்கோபமடைந்த என் தந்தை “எல்லாம் வரியாகப் போகக் கடவது” என்று சபித்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.

உலகமே வரிமயமானது. வரி மனிதர்கள், வரி யானைகள், வரி நோட்டுகள் , வரி சிங்கங்கள், வரி மலைகள் , வரி கொசுக்கள் , வரி வரியான நத்தைகள் , வரிப் பூரான்கள் இன்னும் ஏன் வரி வைரசுகள், வரி பாக்டீரியாக்கள் , வரி ரத்தச் சிவப்பணுக்கள், வரி ரத்த வெள்ளை அணுக்கள், வரி நியூட்ரான்கள், வரி எலக்ட்ரான்கள், வரி புரோட்டான்கள்,  வரி ஹிக்ஸ் போஸான் துகள்கள் என பூவுலகில் இருந்த அனைத்தும் வரிவடிவமாகிவிட்டிருந்தது. எங்கள் குருவும் இதற்கு விலக்காகவில்லை. அவரது உடலும் வரிவரியாக மாறியிருந்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எனது குரு ” என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு, மாபாதகம் செய்துவிட்டேன் , மன்னித்தருளள் வேண்டும், உங்கள் சாபத்தை திரும்பப்பெற்றுக் காத்தருளள் வேண்டும், அடியேனை ரட்சிக்க வேண்டும் ” என்றவாரு என் தந்தையின் பாதங்களைப் பிடிக்கவந்தார். 

” குருதேவா ,என்ன காரியம் செய்கிறீர்கள்.? நீங்கள் என் கால்களைப் பிடிப்பதா? இதைவிடப் பெரிய பாவம் எனக்கில்லை! “ என்றவாரு விலகிக் கொண்ட என் தந்தை “ எனது சாவம் விமோசனம் பெற இந்தக் குடத்தில் உள்ள நீரை எல்லா உயிர்கள் மீதும் தெளித்தால் போதும் “ என்று கூறிவிட்டு ஒரு வீரனையும் அவனுக்கு ஒரு குதிரையும் கொடுத்தனுப்பினார்.

அவ்வீரனும் பூலோகம் முழுவதும் சுற்றி எல்லா உயிர்கள் மீதும் தெளித்துக் கடவுளின் சாபத்தைப் போக்கினன். ஆயினும் அவன் ஏறிச் சென்ற குதிரையை மறந்தனன்.அதன் மீது தெளிக்காமல் விட்டுவிட்டதால் அதன் உடல் அப்படியே வரிவரியாய் நிலைத்துவிட்டது. அந்த வரிக்குதிரையின் சந்ததிகளே இன்றும் வரிக்குதிரைகளாய் வாழ்ந்து வருகின்றன.


இத்துணை நேரமும் இதைக் கவனமாகப் படித்த உங்களை வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.

நீதி : இத நீங்க நம்புனா அதுக்கு நான் ஒன்னுமே பண்ணமுடியாது :)

Monday, March 26, 2012

விகடனுக்கு நன்றி!


என்னை விட அறிவிலும், ஆற்றலிலும், புகழிலும் சிறந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்க, நான் படித்து ரசித்த விகடனின் “ நானும் விகடனும்” பகுதியில் என்னையும் எழுதச் சொன்னபோது சந்தோசத்தில் பேச நா எழவில்லை. எப்படி இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் போகிறேனோ தெரியவில்லை? 

படிப்பதில் ஆர்வமில்லாதிருந்த காலத்தில் அல்லது படிப்பதைப் பற்றிய அறிமுகம் இல்லாத காலத்தில் பொழுதுபோக்காக நூலகங்களுக்குச் சென்று வரும்போதும், புத்தகக் கடைகளில் ஆங்காங்கே தொங்கும் வண்ண வண்ணப் போஸ்டர்களிலுமே விகடன் எனக்கு அறிமுகமானது. ஆனால் இணையம் வந்த பிறகு, கதைகள், கவிதைகள் என்று எதையாவது எழுத ஆரம்பித்த காலங்களில் அதனை அச்சில் காணும் ஆர்வமும் எல்லோரையும் போலவே எனக்கும் ஏற்பட்டது. சில நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள் என்று நான் சொல்லிக் கொண்டவை என சில கிறுக்கல்களை, கணினியில் எழுதி அழகாகக் கிறுக்கல் இல்லாமல் அனுப்பியும் இருக்கிறேன். நாளாக நாளாக வாசிப்பில் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க விகடனைப் பற்றிய தெளிவும், அதன் வசீகரமும், மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் செல்வாக்கும் என்னைப் பிரமிக்க வைத்தது. அந்தச் சமயத்தில்தான் நான் தமிழ்க் கீச்சுலகில் அடியெடுத்து வைக்க நினைத்து, அப்படி வைத்தால் கணினி உடைந்துவிடும் என்று பயந்து, எனது மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு ஒரு கீச்சர் கணக்கினைத் தொடங்கினேன். சில வாரங்களுக்குப் பிறகு என்னால் என்னையே நம்ப இயலாத அளவிற்கு எனது கீச்சொன்றை தனது வலைபாயுதே பகுதியில் பிரசுரித்து அளவில்லாத மகிழ்ச்சியில் தள்ளியிருந்தார்கள். மீண்டும் பல முறை எனது கீச்சுக்களை பிரசுரித்து என்னையும் ஊரறிய வைத்த பெருமை விகடனுக்கே!

இன்னும் சில மாதங்கள் கரைந்திருந்தது. கரைப்பார் கரைக்காமலே தானே கரைவதில் காலமும் ஒன்று. அப்பொழுது எனக்கு இன்னுமொரு பேரானந்ததையும் தந்திருந்தார்கள்.ஆம். விகடனின் என் விகடன் இதழில் கோவைப்பதிப்பின் வலையோசை பகுதியில் எனது வலைப்பதிவுகளைப் பற்றியும் சிறு அறிமுகம் செய்திருந்தார்கள்.  அப்பொழுதெல்லாம் நான் எஃப்.எம் கேட்பதையே விட்டிருந்தேன். FM  கேட்டாலே கோபம் வருகிற மாதிரி ஒரு உணர்வு. எனக்கே என் மேல் கோபம். அந்த RJ விடம் இருக்கிற திறமை ஏன் என்னிடம் இல்லை? ஏன் இன்னும் RJ ஆகவில்லை என்று கோபம்கொள்ளும் நிலையில் இருந்தேன். அப்பொழுது இந்த ஊக்குவிப்பு அல்லது அங்கீகாரம் கொஞ்சம் ஊக்கமளித்தது. அதைப் பற்றி அப்பொழுது எழுதிய பதிவிலிருந்து கொஞ்சம்..


”எனக்கு இத எப்படி எழுதுறதுனே தெரியலை. அவ்ளோ சந்தோசமா இருக்கேன். நானெல்லாம் இத நினைச்சுக் கூடப் பார்க்கலை. ஏன்னா கொங்கு மண்டல வலைப்பதிவர்களில் என்னை விட, ரொம்ப நல்லா எழுதுறவங்க ஆயிரம் பேர் இருக்காங்க. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பெரும்பாலும் விளையாட்டா எழுத ஆரம்பிச்சதுதான் என்னோட இந்த கோமாளி வலைப்பதிவு. சமூக விசயங்களை எழுதுறது ரொம்பவே குறைவு. ஏன எழுதுறதே இல்லைனு கூடச் சொல்லலாம். 

நான் வலைப்பதிவு எழுத வந்ததின் நோக்கமே மீடியாவில், முக்கியமா என்னோட லட்சியமான ஆர்.ஜே ஆவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவும் அப்படிங்கிறதுதான். கடந்த இரண்டு வருசமா எனக்குத் தோன்றிய எதையாவது, எனக்குத் தெரிஞ்ச நடைல எழுதிட்டு வந்திருக்கேன். முக்கியமா இந்த வலைப்பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு வாசிக்கும் பழக்கமே கிடையாது. பிறகு சிறிது சிறிதாக வலையுலக நண்பர்களின், முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.எல்லோரும் தங்களது வலைப்பதிவைப் பத்தி மின்னஞ்சலிட்டுக் காத்திருக்கும்போது மின்னஞ்சலே ஆனுப்பாம என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தினது ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு. அதே சமயம் என் நண்பர்கள் யாரேனும் என் வலைப்பதிவைப் பத்தி மின்னஞ்சலினார்களா என்று தெரிவயில்லை. அப்படி யாரேனும் அனுப்பியிருந்தா அவுங்களுக்கும் என்னோட நன்றிகள்.

பெரும்பாலும் நகைச்சுவைங்கிற பேர்ல நான் எழுதி வந்ததெல்லாம் சிரிக்க வைத்ததோ இல்லையோ, ஆனா இப்பக் கொஞ்சம் ஓரளவு நல்லா எழுதிப் பழகியிருக்கேன்னு நினைக்கிறேன். இந்த சமயத்தில் இப்படி ஒரு ஊக்குவிப்பு என்னை மேலும் சிறப்பா எழுதனும்ற ஒரு ஆசையை உருவாக்கியிருக்கு.

ஆர்.ஜே ஆகணும்கிற என்னோட கனவு எப்ப நிறைவேறும்னு தெரியலை.  இப்பலாம் FM கேக்கவே பிடிக்கலை. எதாச்சும் நிகழ்ச்சி கேட்டா என்னையறியாமலே கோபமும், அழுகையும் வருது. உண்மையில நமக்கு அந்தத் தகுதி இல்லையோனு கஷ்டமா இருக்கு. நானே ஒரு எப்.எம் ஸ்டேசன் தொடங்கி, இப்போ இருக்கிற வானொலிகளை விடத் தரமான, உருப்படியான விசயங்களோட, மக்களை சந்தோசப்படுத்தும் நிகழ்ச்சிகளை வழங்கனும்னுதான் ஆசை. அதிகமா ஆசைப்படுறேனோனு அடிக்கடி தோணும். ஆனா இது மாதிரி சின்னச் சின்ன சந்தோசங்கள், ஊக்குவிப்புகள் என்னை என்னோட லட்சியத்தை நோக்கித் தொடர்ந்து போகனும்கிற ஒருவிதமான தைரியத்தைக் குடுக்குதுனே சொல்லலாம். அந்த வகையில் கண்டிப்பா விகடனுக்கு என்னோட மிகப் பெரிய நன்றியைத் தெரியப்படுத்தியே ஆகணும். அதே மாதிரி ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் என்னோட நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கேன்!”




இந்தப் பதிவு என்னோட கோமாளி வலைப்பதிவ ஆனந்த விகடன் - என் விகடன் கோவைப் பதிப்புல வந்த ”வலையோசை” பகுதியில  அறிமுகப்படுத்தின போது 26.03.2012 ல எழுதினது. அதன் நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாவே இருக்கு. அப்புறம் சில மாதங்களில் நான் நினைச்சது மாதிரியே என்னோட லட்சியம் நிறைவேறிச்சு. ஒரு பிரபல தனியார் பண்பலை வானொலியில் ஆர்.ஜே ஆனேன். அப்பவும் இதே மாதிரி ஒரு தடவ வலையோசையில் என்னைப் பத்தியும், என் நிகழ்ச்சி பத்தியும் எழுதியிருந்தாங்க. அப்போ எழுதின பதிவிலிருந்து...

“ இந்த வாரம் எனக்கு ரொம்பவே சந்தோசமான வாரம். ஆமாங்க! இந்த வார ஆனந்தவிகடன் - வலையோசைல என்னோட நிகழ்ச்சி பத்தி எழுதி, என்னைய நல்ல ஆர்.ஜேனு சொல்லிருக்காங்க. இதுக்கு முன்னாடியே என்னோட இந்த வலைப்பதிவைப் பத்தி வலையோசைல சொல்லியிருந்தாலும், இந்தத் தடவ அத விட சந்தோசமா இருக்கேன். காரணம் என்னன்னா, என்னோட மானசீக குருவான ”மா.கா.பா ஆனந்த்” அண்ணன 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆர்.ஜே னு விகடன் விருது கொடுத்திருக்காங்க. அதே பத்திரிக்கைல என்னையும் நல்ல RJனு சொன்னதுதான் என் சந்தோசத்துக்குக் காரணம்!”

இப்படியாக விகடனால் நான் எத்தனையோமுறை மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். நம்மைப் பற்றிய ஒரு செய்தி ஒலி, ஒளி ஊடகங்களைக் காட்டிலும் அச்சு ஊடகத்தில் வரும்போது அதிக சந்தோசத்தையும், மதிப்பையும் பெறுகிறது. ஒலி, ஒளி ஊடகங்களில் அது ஒளிபரப்பாகும்போதே கேட்டாலோ, பார்த்தாலோதான் உண்டு. என்னதான் அதற்குப் பிறகு அதனைப் பதிவு செய்து வைத்துக் கொண்டாலும் அதன் உயிர்ப்பு நீடிப்பதில்லை. ஆனால் அச்சு ஊடகங்கள் அதே உயிர்ப்புடன் இருப்பதே அவற்றில் வரும் நமது படைப்புக்களைக் காலம் தாண்டியும் வாழவைக்கிறது. எங்க எஃப்.எம் RJ's பத்தி விகடன்ல எழுதினப்ப அவுங்களோட சந்தோசத்தை நேர்ல பார்த்திருக்கேன். அத எழுத்துல சொல்லமுடியாது. சமகால பல்சுவை இதழ்களில் விகடனுக்கு நிகர் விகடன்தான். இந்தச் சமகாலம் என்பது விகடன் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரையும், இனியும் தொடர்வதுதான் ஆச்சர்யம்!

அன்புடன்
செல்வா.
உரிமையாளர் - இசை எஃப்.எம்.
01.07.2018



Wednesday, March 21, 2012

கோழிக்கிறுக்கல் - தமிழர்கள் மறந்துவிட்ட ஒரு வரலாறு!


வரலாற்றினை மறந்துவிடுவது தமிழர்களாகிய நமக்கொன்றும் புதிதில்லை. போற்றி வளர்க்க வேண்டிய வரலாறுகளைக் கேலிக்குரியதாக்கி, வரலாறு படிப்பவர்களைக் கண்டால், "வரலாறு படிப்பதை விட்டுவிட்டு வரலாறு படைக்கக் கற்றுக்கொள்" என்றவொரு இலவச அறிவுரையை வழங்கிவிட்டுப் பரிகசித்துச் செல்லக்கூடிய ஒரு சூழலில், எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் அழிந்து போவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

ராஜ ராஜ சோழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மதிப்பெண்களாக்கி பாடப்புத்தங்களில் உறங்க வைத்துவிட்டோம். எமி ஜேக்சன்கள் வந்து “மறண்டுட்டியா?” என்று கேட்காமலோ, நமீதாக்கள் வந்து தங்களின் திரையுல அனுபவத்தை மச்சான்களிடம் சொல்லாமலிருந்தாலோ சுதந்திர தினத்தைக் கூட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். சரி போனது போகட்டும். கோழிக் கிறுக்கல் என்றவொரு பதத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள நெடும் வரலாற்றுத் தகவலை உங்களிடம் சேர்ப்பிக்கவே இவ்வளவு பீடிகை போட வேண்டியிருந்தது.

கோழிக் கிறுக்கல் என்றால் கிறுக்கர்கள் கிறுக்குத்தனமாய் எழுதுவது என்பதே பலரது எண்ணமாயிருக்கிறது. உண்மையில் கோழிக் கிறுக்கலுக்கும் கிறுக்குத் தனத்திற்கும் அணுவளவு கூட, ஏன் அணுக்கரு அளவிற்குக் கூடச் சம்பந்தம் இல்லை. இனி வரலாற்றுக்குள்...

பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்னர் உலகைக் கோழிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. கோழிகளே மன்னர்களாக உலகை ஆண்டுவந்தன. அந்தக் காலகட்டங்களில் கோழிகள் பேசும் திறமையுடையவையாகவும், பாடும் திறமையுடையவையாகவும் திகழ்ந்து வந்தன. மனிதர்கள் அவர்களுக்கு அதாவது அவைகளுக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.
பல நூறு ஆண்டுகள் கோழிகளின் அரசாட்சியே நடைபெற்று வந்தது. கோழிகளும், அவற்றின் அடிமைகளான மனிதர்களும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். வானம் பெய்யெனப் பெய்தது என்பதைக் காட்டிலும் கோழி கொக்கரித்தாலே பெய்தது என்று சொல்வது சரியாக இருக்கும். தற்பொழுது வாழும் கோழிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் இவைகளா ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்து ஆண்டுவந்தன என்று நம்புவதற்கு சற்றுச் சிரமமாகவே இருக்கும். இருந்தாலும் வரலாறு என்ற ஒன்று நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால்... மன்னிக்கவும்; அது என்ன கற்றுக் கொடுத்ததென்று நான் மறந்துவிட்டேன்.

இப்படியொரு பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேதான் அந்த பானம் அறிமுகமாகியிருந்தது. அந்தப் பானத்திற்கு நாடு நகரத்தில் இருந்த அனைத்து ஜீவ ராசிகளும் அடிமைப்பட்டுப் போயிருந்தன. மனிதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்த கோழிகளும் கூட அப்பானத்திற்கு அடிமையானதென்று தெரிகிறது. கோழியும் இதற்கு விதிவிலக்கல்ல. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தவரி. கோழியும் இதற்கு அடிமையாகிவிட்டது. 

சில வாரங்களுக்குப் பிறகு கோழி அரசன் அலுவலக நேரத்திலே கூட சோமபானம் செய்யத் தொடங்கிவிட்டான். நாடு நகரமெல்லாம் இதே பேச்சாயிருந்தது. சோமபானத்திற்கு அடிமைப்பட்டிருந்த கோழியின் ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் மக்களும், கோழிகளும் சோமபானத்திற்கு அடிமையாக இருந்தபடியால் யாருக்கும் மன்னரை எதிர்த்துப் போரிட விருப்பமில்லை. இந்தச் சமயத்தில்தான் கடவுள் தான் படைத்த கோழியூர் அரசாட்சியைப் பார்வையிட தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.

அந்தச் சமயத்தில் ஆட்சியிலிருந்த கோழியானது அதிகப்படியாக சோமபானம் செய்ததால் அரியணையிலிருந்து மேலே எழ முடியாமல் மயங்கி விழுந்தது. ஆனால் இந்த இடத்தில் விழுந்தான் என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவைகள் அப்பொழுதெல்லாம் ஆறறிவு கொண்டு உயர்திணை உயிர்களாக வாழ்ந்துவந்தன.

கடவுளும் நேராக அரச தர்பாருக்கு வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் அரசரோ சோமபானத்தால் மயங்கிக் கிடக்கிறார். இப்படியொரு அரசரைப் பார்த்தால் கடவுள் உடனே சிரச்சேதம் செய்யச் சொல்லிவிடுவாரே என்று பயந்த கோழி தமக்குப் பதிலாக சிறிது நேரம் யாரையேனும் அரியணையில் அமர்த்திவிட எத்தனித்தது. அந்த நேரம் பார்த்து அரசவையில் எந்த ஒரு கோழியும் இருக்கவில்லை. ஆனால் கடவுள் நெருங்கிவிட்டார். இந்தச் சமயத்தில்தான் அந்தப் புத்திசாலிக் கோழி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது. ஆம்; அப்பொழுது தனது அடிமைகளில் இருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து, கடவுள் அரசவையிலிருந்து வெளியேறும் வரையில் அரியணையில் அமர்ந்து தன்னைப் போல் நடிக்குமாறு கூறி, தன் தலையில் இருந்த கிரீடத்தையும், சில கோழிப் பொங்குகளையும் அணிவித்துவிட்டு அரியணையிலிருந்து எழுந்து.., இல்லை விழுந்து வழிவிட்டு அருகில் இருந்த அறையில் சென்று ஒளிந்து கொண்டது.

கடவுளும் வந்தார். சிறிது நேரம் மனித அடிமையும் கோழியைப் போல நடித்தது. இறுதியில் கடவுள் விடைபெறும் தருணத்தில், நாட்டில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை ஒரு ஓலையில் எழுதித் தன்னிடம் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அரசனாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமையும் ஏற்கெனவே கோழி சொன்னதைப் போல ஒரு ஓலையினை எடுத்துக் குறைகள் எதுவுமில்லையென்று எழுதிக் கடவுளிடம் நீட்டினான். ஆனால் கையெழுத்து அழகாயிருந்தால் எங்கே தன்னை ஒரு மனிதன் என்று கண்டுபிடித்துவிடுவாரோ என்றஞ்சி கோழியின் கையெழுத்தைப் போல கிறுக்கிக் கிறுக்கி எழுதிக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த கடவுள் ” என்ன கோழி கிறுக்கினாப்ல இருக்கு? “ என்றாராம். 

கோழியாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமைக்குத் தூக்கிவாரிப்போட்டது. கடவுள் எப்படி தான் ஒரு கோழி அல்ல என்பதைக் கண்டுபிடித்தார் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே சோமபான மயக்கத்திலிருந்த கோழியானது ஓடோடி, பறந்தோடி, உருண்டோடி வந்து கடவுள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி “ மகா பிரபோ! என்னை மன்னித்தருளுங்கள்! சோமபான மயக்கத்தில் செய்யக்கூடாதது செய்தேன். என்னைக் காத்தருளுங்கள்” என்றவாறு கதறத் தொடங்கியது. அதன் கதறலில் அண்ட சராசரங்கள் நடுநடுங்கின. கேலக்சிகள் எனப்படும் பெருவெடிப்புகள் வெடித்தன. எரிமலைகள் வெடித்தன. தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த கொள்ளுப்பட்டாசுகள் வெடித்தன. 

சாந்தமே உருவான கடவுளுக்கு எல்லாம் விளங்கியது. அவர்தானே இந்தத் திருவிளையாடைலை நிகழ்த்தியது. சிவாஜியோ, தனுசோ இல்லாததால்தான் கடவுளே திருவிளையாடல் நிகழ்த்தினார் என்று நீங்கள் இப்பொழுது எண்ணினால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு நேரமில்லை. 

அதே சமயம் கடவுள் பெருங்கோபம் கொண்டெழுந்தார். கோழி எத்தனையோ பிரயாசைப்பட்டும் அவரின் கோபத்தை அடக்கமுடியவில்லை. இறுதியாக அவரின் சாபத்திற்கு ஆளானது கோழி. அவரின் சாபத்தினாலேதான் இப்பொழுது கோழிகள் மனிதனின் அடிமைகளாகவும், அல்லது வளர்ப்புப் பிராணிகளாகவும் வாழ்ந்துவருகின்றன. 

இந்த வரலாற்றினைச் சிலர் நம்ப மறுக்கின்றனர். ஆயினும் இதுவே உண்மை என்பதற்குச் சில உதாரணங்களை என்னால் சொல்லமுடியும்.

*.பண்டைய மன்னர்கள் தங்கள் தலைகளில் கோழிப் பொங்கினை வைத்துக் கொண்டிருப்பதைப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த வழக்கம் இந்த நிகழ்வுக்குப் பிறகே வந்தது.

*.கோழிகளின் கால் விரல்கள் இப்பொழுதும் நமது கை விரல்களைப் போலவே, அதாவது நமது உள்ளங்கைகளைப் போலவே காணப்படுகின்றன.

*. கோழிகள் எதையாவது , எப்போதும் தனது கால்களால் கிளறிக் கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றின் மரபணுவில் பதிந்துள்ள எழுதும் கலையே.

*.பண்டைய காலத்துத் தலைவர்களும் கோழிப் பொங்கினை தலையில் சூடியிருப்பது போன்ற சித்திரங்களும், திரைப்படங்களும் இந்த வரலாற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வரலாறுகளை மறவாதீர். வரலாறுகளே நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுகின்றன. எனவே வரலாறுகளைப் படியுங்கள். படிக்க விருப்பமில்லாதவர்கள் இதுபோன்ற வரலாறுகளைக் கற்பனையாகவாவது படைத்து அடுத்தவரின் கண்களையும், நேரத்தையும் வீணடியுங்கள். நன்றி.

இந்த வரலாற்றின் நீதி : பணியின் போது சோமபானம் செய்வதைத் தவிர்ப்பீர்!

Monday, March 5, 2012

இன்னும் ஒரு எலி!


இன்றுடன் அவன் கதை முடிந்தது. ஆறுமாத கால எதிரியை எத்தனையோ சூழ்ச்சிகள் செய்து இறுதியாகச் சாப்பாட்டில் விஷம் வைத்துதான் கொல்ல முடிந்திருக்கிறது. இதோ என் கண் முன்னால் தன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு , கோரமாகச் செத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எவ்வளவுதான் தொல்லைகள் கொடுத்திருந்தாலும் ஒரு அஃறிணை உயிரான எலியை அது என்று விளிக்காமல், அவன் இவன் என்று விளிப்பது உங்களுக்குக் கொஞ்சம் அசூசையாக இருக்கலாம். ஆனால் அவன்( அது) என் வீட்டிற்கு வந்த கடந்த ஆறு மாத காலத்தில் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடூரங்களைத் தெரிந்து கொண்டால் அவனைத் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய வில்லனாக நடிக்கச் சிபாரிசு செய்வீர்கள்!

கிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இந்த ஊரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில்தான் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். என் சொந்த ஊரிலிருந்து நான் பணிபுரியும் இந்த ஊர் மிகத் தொலைவில் உள்ளதாலும், இந்த ஊரிலிருந்து அருகில் இருக்கும் மற்றொரு வசதி படைத்த நகரமும் கொஞ்சம் நெடுந்தொலைவிலேயே இருக்கிறபடியால் இங்கேயே , இந்த ஊரிலேயே தங்கித் தொலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானேன். இந்த ஊரில் தங்கத் தொடங்கிய முதல் நான்கு மாதங்கள் நன்றாகத்தான் கழிந்தன.ஐந்தாவது மாதத்தின் முதலாவது வாரத்தின் எட்டாவது நாளில்தான் என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான் இந்தப் படுபாதகன். வாரத்திற்கு எப்படி எட்டாவது நாள் என்று குழம்பவேண்டாம். இவனது கொடூரத் தொல்லைகளால் நான்தான் அவ்வாறு தவறுதலாக எழுதிவிட்டேன்.

கடந்த ஆறுமாத காலமாக நான் பெற்ற துன்பங்களையும், துயரங்களையும் எழுத இந்த உலகத்திலுள்ள காகிதங்கள் போதாது. இதெல்லாம் போதாதென்று “ மதியழகன் சார்” என்கிற எனது அழகான பெயரை மாற்றி “ எலிக்குட்டி வாத்தியார் “ என்னும் கேவலமான பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறான். என்னதான் எனக்குச் சரிசமமான எதிரியென்றாலும் இனியும் இந்தச் சாதாரண பொல்லாத எலியை அவன், இவன் என்று விளித்தால் நீங்கள் கொஞ்சம் குழம்பிப் போவீர்கள் என்பதற்காக இனிமேல் “அது” என்றே எழுதுகிறேன்.

இவனைக் கொன்றொழிக்கக் கடந்த ஆறு மாத காலமாக நான் எடுத்த நடவடிக்கைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட ராவணனைக் கொல்ல ராமன் எடுத்திருக்கமாட்டான். ராவணனைக் கொல்ல அவன் தம்பியே ராமனுக்கு உதவியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல இதனைக் கொல்லவதற்கு எனக்கு உதவ, இதன் உயிர் எங்கே இருக்கிறதென்று சொல்ல இந்த எலிக்கு ஒரு தம்பி கூட இல்லை. இருந்தால் மட்டும் எங்கிருந்து கண்டுபிடிப்பது? எல்லா எலிகளும் குடும்ப அட்டை வைத்துக்கொண்டு இலவச அரிசி வாங்கியா வாழ்க்கையை ஓட்டுகின்றன?

இது என் வீட்டில் அத்துமீறி நுழைந்த முதல் இரண்டு நாட்களில் மட்டும் எனக்கு 800 ரூபாய் செலவு. அது ஒன்றும் திறந்திருந்த வீட்டுக் கதவின் வழியே திருடன் நுழைவதைப் போல பூனை நடைபோட்டுக் கொண்டு நுழையவில்லை. அது பூனை நடை போட (CAT WALK) என் வீடென்ன பேஷன் ஷோ மேடையா ? ஒருநாள் நள்ளிரவில் என் வீட்டுக் கூரையில் “ கரக் கரக் “ என்ற சத்தம் கேட்டது. தூக்கம் வராததால் கரப்பான் பூச்சிதான் "ஒய் திஸ் கொலைவெறி “  பாடலை தனது மொழியில் ரீமேக் செய்து பாடிப்பார்க்கிறதோ என்று சமாதானமானேன். மீண்டும் அதே “ கரக் கரக் “. ஆனால் கொஞ்சம் உச்சஸ்தாதியில். நேரமோ நள்ளிரவு; இருப்பதோ தனிமையில்; வீடோ புதிது. யோசித்துப் பாருங்கள் என் நிலையை. கை, கால்கள் எல்லாம் நடுங்குகிறதா? அது ஒன்றுமில்லை, ஏர் கண்டிசனரைக் கொஞ்சம் அதிகக் குளிரில் வைத்துள்ளீர்கள். இவ்வளவு மின்சாரப் பற்றாக்குறை உள்ள காலத்தில் எதற்காக இப்படி A/C யை எல்லாம் போட்டுக்கொண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்? நீங்கள் இதில் கொஞ்சம் மின்சாரத்தை மிச்சம் பிடித்தால் மின் தட்டுப்பாட்டை ஓரளவாவது சரி செய்திட இயலும்.கொஞ்சமேனும் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். என்ன,அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில்   இருக்கும் நாங்கள் A/C பயன்படுத்தாமல் இருப்பதற்கும், தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள். மன்னித்துவிடுங்கள். கரண்ட் என்றால் எங்களுக்குக் கடவுள் போல மாறிவிட்டது. அதனால் கொஞ்சம் ஆத்திரமடைந்துவிட்டேன்.

இப்போது இன்னும் அருகில் “ கரக் கரக் “. என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. A/C காரணமல்ல. இந்தமுறை பேய் வந்துவிட்டதோ என்ற பயம்தான் காரணம். இந்தவீட்டில் இதற்கு முன்னர் குடியிருந்தவர்கள் யாரேனும் காதல் தோல்வியால் தூக்குப்போட்டுக் கொண்டவர்கள் பேயாக வந்து பயப்படுத்துகிறார்களோ என்று நினைக்க நினைக்க கால்கள் இரண்டும் இசையில்லாமலேயே மைக்கேல் ஜாக்சனுக்குச் சவால்விட்டன. ஒருவேளை மைக்கேல் ஜாக்சனும் இப்படி எதையோ நினைத்துப் பயந்துதான் ஆடினாரோ என்னவோ ?

மறுநாள் காலையில் முதல் வேளையாக என் நண்பனிடம் இதைப் பற்றித் தொலைபேசினேன். அவனும் இது பேயின் வேலையாகத்தான் இருக்குமென்றும், அருகில் இருக்கும் கருப்பராயன் கோவிலில் சாமி கும்பிடு என்றும் அறிவுறுத்தினான். நானும் பயபக்தியுடன் அருகில் இருந்த கருப்பராயன் கோவிலுக்குச் சென்று, அங்கே சந்நதம் வந்து ஆடிக்கொண்டிருந்த பூசாரியை அணுகினேன். ஏதேனும் குறையிருப்பவர்கள் அவர் காலில் விழுந்தால், நமக்கு என்ன குறை என்று கண்டுபிடித்து, அதை எப்படிப் போக்குவது என்றும் பரிகாரம் சொல்லுவார். அதைப் போலவே சிலர் அவர் காலில் விழுந்து சாமி கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் அவர் காலில் விழுந்து, ஆவலாய் அவர் முகம் பார்த்தேன். முறுக்கு மீசையுடன் இருந்த அவரைப் பார்க்க கொஞ்சம் கோரமாக இருந்தாலும், பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்றதும், என் தோளினை லேசாகப் பிடித்து, கொஞ்சம் கெட்டியாகப் பிடித்து இரண்டு உலுக்கு உலுக்கி, “ ஆடி கழிச்சு ஆவணிக்குள்ள் மழை பெய்யும் போ! “ என்றார்.

கூரையில் “கரக் கரக்” கிற்கும், மழை பெய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும் என்று ஒருவாறு குழம்பியவாறே சந்தேகத்தைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் வேறொருவர் அவர் காலில் விழுந்துவிட நான் வெளியே தள்ளப்பட்டேன். ஆனால் இது பெருங்குழப்பமாக இருந்தது. ஒருவேளை மழை பெய்யும் வரையில் அந்தப் பேய் இருக்குமென்பதை மறைபொருளில், இலக்கியத் தன்மையுடன் கூறுகிறாரோ என நினைத்துக் குழப்பத்தப் போக்க மீண்டும் வரிசையில் நின்று, மீண்டும் காலில் விழுந்தேன். இந்த முறை “ அடுத்த ஆறு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிச்சிடலாம், கவலைப்படாம போ “ என்றார். “ கரக் கரக்” சத்தத்திற்கும், கல்யாணத்திற்கும் என்ன எழவு சம்பந்தம் இருக்கிறதோ என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்தேன். இந்தக் குழப்பத்தில் அது என்ன “கரக் கரக்” சத்தம் என்பதையே மறந்து போயிருந்தேன். பின் வழக்கம் போலவே பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன். அன்று இரவு வரை எனக்கு அந்த “கரக் கரக்” சத்தியமாக நினைவிலில்லை. காரணமென்னவென்றால் நான் உண்மையில் கோவில் பூசாரியைப் பார்த்துக் கொஞ்சம் பயந்துவிட்டிருந்தேன்.

அன்றும் அதே நள்ளிரவு. அதே “ கரக் கரக்”. மீண்டும் பேய், பிசாசு பயம். அப்போது என் கால்கள் நடனத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க எங்கோ தூரத்தில் “ நல்லகாலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என்ற குடுகுடுப்பைச் சத்தம். அந்த உடுக்கை ஒலி எனக்கு எப்பொழுதும் பயத்தைக் கொடுக்குமென்பதால் அருகில் கிடந்த துணி ஒன்றால் காதுகளை நன்றாக அடைத்துவிட்டுப் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டேன். எப்போது தூங்கினேனோ ?

காலையில் மீண்டும் அதே குடுகுடுப்பை ஒலிதான் என்னை எழுப்பிவிட்டது. இரவில் கேட்டதை விடக் கொஞ்சம் அருகில் கேட்டது. பெரும்பாலும் பகலில் செத்த பாம்பை அடிக்கும் அளவு தைரியமானவன் என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். குடுகுடுப்பைக்காரன் கையில் சில தாயத்துக்களுடன் குடுகுடுப்பை அடித்தவாரே போய்க்கொண்டிருந்தான். சட்டென ஒரு யோசனை. ஒருவேளை இவருக்குப் பேயோட்டவும் தெரியுமோ ? உடனே கடகடவென முகத்தைக் கழுவிக்கொண்டு, ஓட்டமாக ஓடி குடுகுடுப்பைக்காரனை நெருங்கி விசயத்தைச் சொன்னேன்.

“நைட்டானா தலைக்கு மேல ’கொரக் கொரக்’னு சத்தம் கேக்குதுங்க. ஒருவேளை பேய் இருக்குமோன்னு பார்த்துச் சொல்லுங்க “ அவரும் தனது குடுகுடுப்பையை ஒலித்தவாரே என் வீட்டை அடைந்தார். குடுகுடுப்பையை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. ஆனால் அதன் ஒலி மட்டும் மிக பயங்கரமாக, அச்சுறுத்தும் விதமாகவே எனக்கு இருக்கிறது.

சிறிது நேரம் வீட்டிற்குள் அங்குமிங்கும் நடமாடியவர், திடீரென ஓரிடத்தில் வேகத்தடையைக் கண்டவர் போல சட்டென நின்று தலையை நிமிர்த்தி, மேலே விட்டத்தைப் பார்த்து,

“ இப்போ வெளிய வர்றியா, இல்லையா ? “

“ “

“ வரமாட்ட”

“ “

“உன்ன என்ன பண்றேன் பார் “ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். பேய்களோடு மல்லுக்கட்டி எனக்குப் பழக்கமில்லையாதலால் எந்த நேரத்திலும் வெளியே ஓடுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தேன்.

“ தம்பி, இது காத்துப் பெரட்டுத்தான்! ஒரு எந்தரம் மந்திருச்சு வச்சா சரியா போய்டும் “

“ அப்புறமென்ன வச்சிருங்க “ என்றேன் பாலைவனத்தில் பனிமலையைப் பார்த்தது போல.

“ ஒரு 2500/- ரூவா ஆகும் “

“ இரண்டாயிரத்து ஐநூறா!? இந்த வீட்டுக்குக் குடுத்த அட்வான்சே 500 தாங்க. 2500 க்கு எந்தரம் வாங்கி வைக்கிறதுனா நான் இந்த வீட்ட விட்டுட்டு வேற வீடு பார்த்துக்குவேன்! “

சிறிது நேரத்திற்குப் பிறகு, பேயோட்டுவதில் பேரம் முடிந்து 500 ரூபாய எந்திரத்திற்கு வந்தது. ஆனால் இது சுவற்றில் மாட்டும் எந்திரமல்ல, இடுப்பில் கட்டிக் கொள்ளக்கூடிய தாயத்து. இது விலை குறைவாக இருந்தாலும் சுவற்றில் மாட்டும் எந்திரத்தை விட இதில் பலன்கள் அதிகமென்றே கருதுகிறேன். ஏனெனில் வீட்டில் மாட்டியிருக்கும் எந்திரங்கள் வீட்டுக்கு வந்தால் மட்டுமே பாதுகாப்பளிக்கும்.ஆனால் இடுப்பில்,கைகளில் கட்டியிருக்கும் தாயத்துகளோ நாம் போகுமிடமெல்லாம் கூடவே வந்து நமக்குத் தைரியம் அளிக்கும். ஒருமுறை நான் பள்ளியில் படிக்கும்போது எங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்துப் பயந்து போவதுண்டு. அப்பொழுதெல்லாம் இதுபோன்ற தாயத்துகள் என் பயத்தினைப் போக்கியிருக்கின்றன. ஆனால் தாயத்து பேயை ஓட்டுகிறது என்கிறார்கள், பின் எதற்காக உயிரோடிருக்கும் தமிழ் வாத்தியாரைக் கண்டு பயக்காமலிருக்கு இதைக் கட்டி விடுகிறார்களோ என்றுதான் குழப்பமாக இருக்கிறது!

தாயத்தினைக் கட்டும்போது சாம்பிராணி காட்டி கட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு குடுகுடுப்பையை ஒருமுறை ஒலித்துவிட்டுச் சென்றார் குடுகுடுப்பைக்காரர். அப்பொழுது பள்ளிக்கு நேரமாகிவிட்டிருந்தபடியால் மாலையில் வந்து கட்டிக்கொள்ளலாம் என உத்தேசித்து பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினேன்.

மாலையில் வீடு திரும்பியதும், முதல் வேலையாக அந்தத் தாயத்தினை எடுத்துக் கட்டிலின் மீது வைத்துவிட்டுச் சாம்பிராணி பற்ற வைப்பதற்காகச் சமையலறைக்குள் நுழைந்தேன். சாம்பிராணியை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தால் “ என்னே ஆச்சர்யம்!” தாயத்தைக் காணவில்லை. “ க இ ற ல ப ம ந ரி லு பே உ “ ஒன்றுமில்லை, பயத்தில் நாக்கு குழறிற்று. என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யமுடியவில்லை. பேய்தான் அதை எடுத்துச் சென்றுவிட்டதென்று முடிவே செய்துவிட்டேன். பேயை ஓட்டுவதற்காகத்தான்  நான் தாயத்தை வாங்கினேன் என்று அது தெரிந்துகொண்டு , இப்பொழுது இப்படிச் செய்கிறதென்று எனக்க்குள் தூங்கிக் கொண்டிருந்த ராமநாராயணன் தெரியப்படுத்தினார். இந்தச் சமயத்தில் மீண்டும் அதே “ கரக் கரக் “!

மேலே நிமிர்ந்து பார்க்கும் தைரியம் துளிகூட என்னிடமில்லை. அங்கே நிச்சயம் ஒரு பேய் தன் கோரப் பற்களில் ரத்தம் ஒழுக, தலைவிரி கோலமாக நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு என்னை விழுந்த வந்துகொண்டிருக்கும் என்று எனக்குள் இருந்த விட்டலாச்சாரியார் பயமுறுத்தினார். மொத்தத்தில் எனக்குள் நான் இல்லை. கடைசியாக அந்தப் பேயைப் பார்த்துவிட்டாவது செத்துப் போகலாம் என்று “ கரக் கரக்” வந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே வீட்டின் விட்டம்தான் தெரிந்தது. இப்படிப் பயந்து நடுங்கும் என்னை அந்த விட்டம் பரிதாபமாகப் பார்ப்பதாகத் தோன்றிற்று. ஆனாலும் அதற்குத்தான் கண்கள் இல்லையே!

விட்டத்தில் நாக்கு ஏதேனும் தொங்கிக்கொண்டிருக்கும் என்றுதான் சற்று உன்னிப்பாகக் கவனித்தேன். அப்படியெதுவும் இல்லாதது சற்று தைரியத்தைக் கொடுத்திருந்தாலும், அங்கே தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பொருள் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆம், காணாமல் போன தாயத்து அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. தாயத்து எங்கே அப்படி.? ஒருவேளை நள்ளிரவில் மின்வெட்டினால் ஏற்படும் இருளில் வெளிவரப் பயந்து , பயத்தினைப் போக்கத் தாயத்தினை எடுத்திருக்குமோ அந்தப் பேய்?

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் தாயத்து இருந்த இடத்தில் "கரக் கரக்” சத்தம் மீண்டு(ம்) வந்தது. இப்பொழுது பயத்திற்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. பின்னே எனக்கு வைத்திருந்த தாயத்தினை, அந்தப் பேய் தனக்கென எடுத்துக் கொண்டால் யார்தான் அதைப் பார்த்துப் பயப்பார்கள் ? ஆனால் இந்த ஏளனம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம் அந்தத் தாயத்து தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் இன்னும் ஒன்று தெரிந்தது. நன்றாக உற்றுப் பார்த்ததில் ஏதோ ஒரு உயிரின் வால் பகுதி என்பதும், அந்த வால் பகுதிக்குச் சொந்தமான உடல் பகுதி நிச்சயம் எலியினுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்றும் உறுதியானது. ஆக ஒரு சாதாரண எலியைக் கண்டு பயந்துவிட்டு, இல்லை காணாமல் பயந்துவிட்டு பேயென்றும், பிசாசென்றும் அலைந்து திரிந்திருக்கிறேன். வெளியில் தெரிந்தால் எவ்வளவு அவமானகிப் போகும்? அப்பொழுது இந்த எலி என் வாழ்க்கையின் மிக முக்கிய வில்லன் என்பது தெரிந்திருக்கவில்லை. இப்படியாக இவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அடச்சே! என்ன இது? ஏதோ விருது கிடைத்ததைப் போலச் சொல்லுகிறேன்.

எலி ஒரு அற்புதமான விலங்கு. மனித வாழ்வியலின் மிக முக்கியப் பங்காளியாக விளங்குகின்றன எலிகள். மனிதனுக்காகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளைக் கூட முதலில் எலிகளே சுவைபார்க்கின்றன.எலிகள் முக்கியமாகக் கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் எப்படியேனும் குடிபுகுந்து தங்களது இருப்பை “கிரீச் கிரீச்” சத்தத்தின் மூலமோ , இல்லை கூரையைக் கடிப்பதின் மூலமோ மனிதனுக்குத் தெரியப்படுத்துகின்றன. மனிதன் தின்னும் எல்லா வகையான உணவுப் பொருட்களையும் எப்படியேனும் திருடித் தின்கின்றன. இரவுகளில் கூரையைக் கடித்தவாறே நமக்குத் துணை நிற்கின்றன. மின்சார ஒயர்களைக் கடிப்பது, டிவி கேபிள்களைக் கடிப்பது, புத்தகங்களைக் கடிப்பது, சட்டைகளில் ஜன்னல் வைப்பது போன்ற ஏதாவதொரு வேலையைச் சதா சர்வகாலமும் செய்துகொண்டேயிருக்கின்றன. தனிமையில் இருப்போரின் தனிமையைப் போக்குவதில் எலிகள் தனிச்சிறப்பாகச் செயல்படுகின்றன என்றே தோன்றுகிறது.

இந்த எலியைப் பார்த்த சில நாட்கள் அதை எப்படி என் வீட்டிலிருந்து விரட்டியடிப்பது என்று சில முயற்சிகள் செய்தேன். முக்கியமாகக் அதனைக் கொல்லும் எண்ணம் எனக்குச் சிறிதளவேனும் இல்லாததால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பூனை வளர்க்கலாம் என்று பரவலாக யோசனைகள் சொல்லப்பட்டாலும் எனக்கு அதில் விருப்பம் இல்லை. பெரும்பாலும் நான் பார்த்த பூனைகள் எல்லாமே பாலினைத் திருடிக் குடிக்கும் பழக்கமிருந்ததால் எப்போதோ வரும் திருடனைப் பிடிக்க, வீட்டிலேயே ஒரு திருடனை வளர்க்க விரும்பவில்லை.

இந்தச் சமயத்தில்தான் அந்தக் கேடுகெட்ட யோசனை தோன்றியது. ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இப்படி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது குறித்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். ஆம்; இந்த எலியின் சேட்டைகள் நாளாக நாளாக அதிகரித்த வண்ணம் இருந்தன. இதன் தொல்லை தாங்கமாட்டாமல்தான் அப்படியொரு வினோத யோசனை எனக்குத் தோன்றிற்று. எங்கள் வீட்டிலுள்ள எலியை விரட்ட அதவிடப் பெரிய எலி ஒன்றைச் சாப்பாடு போட்டு வளர்க்கும் யோசனைதான் அது. இந்த யோசனை வரக் காரணம் இந்த ஊரில் உள்ள மாரப்பன் என்னும் மனிதர்தான். இவரைப் பார்க்கும் போதெல்லாம் மனிதன் குரங்கிலிருந்து வந்தானா, இல்லை யானையிலிருந்து வந்தானா என்று டார்வினின் பரிணாமக் கொள்கைகளை அசைத்துப் பார்க்கும் அசாதாரண தைரியம் எனக்கு ஏற்படும். அவ்வளவு குண்டான மனிதர் என்பதாலேயே ஊரில் பலரும் அவரைக் கண்டு கொஞ்சம் பயந்தே இருந்தனர். இதுதான் என் வீட்டிலிருக்கும் சின்ன எலியை ஒரு பெரிய எலியின் மூலம் விரட்டலாம் என்ற யோசனைக்கு வித்திட்டது.அது சரி பெரிய எலிக்கு எங்கே போவது?

அடுத்த நாளே இரும்பினால் செய்யப்பட்ட, கிளி வளர்க்கும் கூண்டொன்றை வாங்கி வந்துவிட்டேன். எலி பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. பள்ளிச் சிறுவர்களிடம் சொன்னால் எப்படியேனும் பிடித்துக் கொடுத்துவிடுவர். ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களைப் படிக்கச் சொன்னாலோ, திட்டினாலோதானே தவறு. இது போன்ற உதவிகள் கேட்பது பிரச்சினை இல்லை. என் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அடுத்த நாளே இரண்டு எலிக்குட்டிகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டனர். இரண்டுமே அழகாக இருந்தன. அவற்றில் மிக அழகான ஒன்றை மட்டும் எடுத்து இரும்புக் கூண்டில் வைத்துவிட்டு , இன்னொன்றை விட்டுவிடுமாறு பையன்களிடம் கூறி அனுப்பினேன். அன்றிலிருந்துதான் ”மதியழகன்” என்னும் என் பெயர் “ எலிக்குட்டி வாத்தியார் “ ஆனது.

என் கவனம் முழுவதும் எலிக்குட்டியை வளர்த்து ஆளாக்குவதில் சென்றது. எத்தனையோ சத்தாண ஆகாரங்களைக் கொடுத்தும் பலனில்லை. அது அப்படியேதானிருந்தது. இப்பொழுது சொல்லப்போகும் விசயத்தைக் கேட்டால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஆம்; காம்ப்ளான் குடிக்கிற குழந்தைங்க இரட்டிப்பு வேகத்துல வளர்றாங்க” என்னும் விளம்பரத்தினைப் பார்த்துவிட்ட்டு அந்த எலிக்குட்டிக்கும் சில பாட்டில்கள் காம்ப்ளானெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். காசு போனதுதான் மிச்சம். எத்தனை செலவு செய்தும் அது கொஞ்சம் கூட வளரவேயில்லை.

அந்த ஒரு மாத இடைவெளியில் பெரிய எலியின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன. என் இரண்டு, மூன்று சட்டைகளுக்குச் ஜன்னல் வைத்ததும் இதில் அடங்கும். ஆனால் என் தனிமையைப் பெரிதும் போக்கியிருந்தது. வீட்டில் இருந்த நேரங்களில் எல்லாம் எப்படி அதை விரட்டுவது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். எத்தனை சேட்டைகளைச் செய்திருந்தாலும் ஏனோ எனக்கு அதனைக் கொல்லும் எண்ணம் வரவேயில்லை. நாளாக நாளாக அதன் சேட்டைகளை நான் ரசிக்கத் தொடங்கிவிட்டேன். இதனால் கூண்டில் இருந்த எலியையும் பையன்களிடம் கொடுத்தனுப்பிவிட்டேன். இந்த எலி என் தோழனாகவே மாறிவிட்டது. என் ஜட்டிகளை இது எடுத்து அணிந்து கொள்ளாவிட்டாலும் சில துணிமணிகளை தன் பங்கிற்காக எடுத்துச் சென்று வீட்டின் விட்டத்தில் கடித்துப் போட்டிருந்தது. என் நண்பர்களிடமும் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இதற்காகவே தினமும் வாழைப்பழம், பிஸ்கட் போன்றவற்றை வீட்டின் ஒரு இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். இதற்கு வாய் மட்டும் பேசத் தெரிந்திருந்தால் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் சென்று படிக்க வைத்திருப்பேன்.

அன்று மட்டும் இது அப்படிச் செய்யாதிருந்தால் இதனை வஞ்சித்துக் கொல்ல வேண்டிய அவசியமே எனக்கு ஏற்பட்டிருக்காது. ஆம்; என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டது.

சஞ்சனா அழகே உருவான பெண். நான் பணிபுரியும் அதே பள்ளியில்தான் அவளும் பணிபுரிகிறாள். அவளைப் பார்த்தவுடனே எனக்குள் பட்டாம் பூச்சிகள் கோடி கோடியாய்ப் பறக்க ஆரம்பித்தன. நானும் அவளிடம் என் காதலைச் சொல்ல சில நேரங்களில் வாயெடுத்தும் சொன்னதில்லை. பயம். சில சமயம் கடிதமும் எழுதியிருக்கேன். ஆனால் உடனே கிழித்துவிடுவேன். ப்யம். சும்மாவா சொன்னார் வைரமுத்து

“அந்தக் கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன் ?
பெண் கண்களைப் பார்த்துக் காதல் சொல்லும் தைரியமுள்ளவன் அவன்! “ என்று.

அப்படியொரு தைரியமான நாளும் வந்தது. என் காதலை முழுவது ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு , இன்று எப்படியும் கொடுத்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தால் நான் இரண்டு நாட்கள் கண்விழித்து எழுதிய , என் உயிரை ஊற்றி நிரப்பி வைத்த காதல் கடித்தத்தை முன்பொருமுறை தாயத்துத் தொங்கிய இடத்தில் வைத்துக் “ கரக் கரக்” கிக் கொண்டிருந்தது இந்தப் பாழாய்ப்போன எலி. கற்பனை செய்து பாருங்கள் என் சோகத்தை! இன்னொரு கடிதம் எழுதிக் கொடுக்கும் தைரியமெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் தோல்வியின் வலியும், வேதனையும் கோபமாக வெளிப்பட்டுத் தினமும் வைக்கும் வாழைப்பழத்தில் விஷம் வைக்கவேண்டியதாய்ப் போயிற்று. இதோ இப்போது என் முன்னால் செத்துக் கிடக்கிறது இந்த எலி.

இனி என் வீடு அமைதியாய் இருக்கும். ஒயர்கள் கடிக்கப்படாது, சட்டைகள் ஓட்டையாகாது. பழங்கள், காய்கறிகள் திருடுபோகாது. இரவில் தலைக்கு மேலே சத்தம் கேட்காது. நிம்மதிதானென்றாலும் ஒருவித விரக்தியை உணர்கிறேன். மனிதனுக்குத் துணையாக இன்னொரு மனிதனே தேவையென்றில்லை. இது போன்ற உயிர்களும் தொல்லையென்றாலும் இவற்றை ரசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் மனிதர்களின் துணையை விட ஆத்மார்த்தமான துணையாக இருக்கவல்லன. பிறந்ததிலிருந்தே இது போன்ற உயிர்களைத் தொல்லையென்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டுவிட்டோம்.

இனி என் வீட்டில் நான் மட்டுமே. யாருக்காகவும் பழங்களை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை. காய்கறிகளை வாங்கிவந்து எங்கு வேண்டுமானாலும் போட்டுவிடலாம். இப்பொழுதுதான் எதையோ இழந்ததாக உணர்கிறேன். ஆம்; என் தோழனை நானே கொன்றுவிட்டேன். இனி யார் என் பொருட்களை என் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் ? கொஞ்சம் அமைதியாருங்கள். கூரையிலிருந்து ஏதோ சத்தம்.. அட மீண்டும் அதே “ கரக் கரக் “!

 நன்றி : இது அதீதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை.

Wednesday, February 22, 2012

அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை


முன்னுரை

   சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந்தது. ஏனெனில் அந்தக் கட்டுரை வெளியான பின்பு அச்சொல்லின் மீதான தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்தச் சொல்லைக் கற்றுக் கொண்டதாக ரஷிய இலக்கியவாதியான தஸ்தாயெவ்ஸ்கி கூறியிருந்ததே இதற்குச் சான்றாகும்.

”அவ்வ்வ்வ்”வின் தோற்றம்

   “அவ்வ்வ்வ்”.... என்னே ஒரு அழகான சொல்! எத்தனை முறை உச்சரித்தாலும் புல்லரிக்க வைக்கும் ஒரே சொல் ”அவ்வ்வ்” மட்டுமே என்பதில் தினையளவும் சந்தேகமில்லை.தினை என்பது என்னவென்று உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம். எனவே தினையளவு என்பதை அரிசியளவு என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சரி விசயத்திற்கு வருவோம். ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லினைத் தோற்றுவித்தது, அதனை அனைவரும் பயன்படுத்தும்படி செய்தது நகைச்சுவை நடிகர் வடிவேலு என்கிற கருத்து நிலவிவருகிறது. ஆனால் உண்மையில் “அவ்வ்வ்வ்” என்ற சொல் சங்ககாலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லின் பொருளைப் பற்றி அறியாமல் அதனைப் பயன்படுத்தி வருவது சற்று வருந்தத்தக்கதே! 

”அவ்வ்வ்வ்”வின் பொருள்

   ”அவ்வ்வ்” என்ற சொல்லிற்கு என்ன பொருள் இருந்துவிட முடியுமென்று பலரும் ஏளனம் செய்து சிரிக்கின்றனர். உண்மையில் ”அவ்வ்வ்” என்ற சொல்லின் பொருள் “அண்டா” என்று எங்களுரில் ஒரு தமிழிலக்கியவாதி தெரிவித்திருக்கிறார். அது எப்படி “அண்டா “ என்ற பொருள் வருமென்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். அவர் வாங்கிய அண்டா ஒன்றிற்கான  பெயர் எழுதிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாகவும், அப்பொழுது இவர் “அவ்வ்வ்” என்று கத்தியவாறே அந்த அழைப்பினை ஏற்றதாகவும், அப்பொழுது அண்டாவிற்குப் பெயர் எழுதுபவர் அண்டாவின் பெயரை “அவ்வ்வ்” என்று எழுதிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது சொல்லுங்கள், அந்த அண்டாவில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அது அவர்களுடைய பொருளாகும். இந்த அண்டாவில் விதி வசத்தால் “அவ்வ்வ்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே “அவ்வ்வ்”வின் பொருள் அண்டாதானே? 

”அவ்வ்வ்”வும் ஔவையாரும்

    தமிழ் கூறும் நல்லுலகில் சிலர் “அவ்வ்வ்” என்ற சொல்லிற்கும் ஔவைக் கிழவிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறிவருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி ”அவ்வ்வ்” என்ற சொல்லினைக் கண்டுபிடித்ததே ஔவையார்தான் என்கிறார்கள். அதாவது ”அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தது?” என்ற சொல்லிற்கு விடையாக ஔவைப் பாட்டியின் பெயரைச் சொல்லி வந்ததாகவும், பின் அவரது பெயருக்குப் பதிலாக “அவ்வ்வ்”வை யார்” என்ற கேள்வியையே பயன்படுத்திப் பின்னர் “அவ்வையார் - ஔவையார்” என்று மாறியதாகச் சிலர் ஐயுறுகின்றனர். ஆனாலும் “அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தார்கள் என்கிற வரலாறு நமக்குக் கிடைக்காமலே போனது தமிழ்மொழியின் மிகப் பெரும் துரதிருஷ்டமாகக் கருதப்படுகிறது.

”அவ்வ்வ்”வும் தமிழக அரசும்

   “அவ்வ்வ்” என்ற சொல்லின் அருமை பெருமைகளை அறிந்த தமிழக அரசு இந்தச் சொல்லின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்தச் சொல்லினை உரக்கக் கத்தி இன்புற வேண்டுமென்றே தற்பொழுது முக்கால் மணிக்கொருதரம் மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்தினைக் கொண்டுவந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழக அரசின் இந்தத் திட்டம் பெருவெற்றி பெற்றிருப்பது நாமறிந்ததே. ஒவ்வொரு முறை மின்சாரம் நிறுத்தப்படும்போதும் எல்லா கிராமம் மற்றும் நகரங்களிலிருந்து “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல்லின் சப்தம் நம் காதுகளில் தேனினைப் பாயச் செய்கிறது என்றால் அது மிகையாகாது. அதிகப்படியான தேன் என் காதுகளில் பாய்ந்துவிட்டதால் நேற்றுத்தான் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் எனது பற்களைச் சோதனை செய்துகொண்டேன். தமிழ்மொழியின் தன்னிகறற்ற சொல்லான “அவ்வ்வ்”வினை நாடெங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த மின்சாரத்தடைத் திட்டத்திற்கு ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.

இணையத்தில் ”அவ்வ்வ்”வின் பங்கு

   பெரும்பாலும் தமிழ் மொழியின் புகழ் பெற்ற எல்லாச் சொற்களுமே இணையத்தில் அதிக மதிப்பைப் பெறுவது வழமையானதே. அதே போல நமது இந்த உலகப் புகழ் பெற்ற “அவ்வ்வ்” என்ற சொல்லும் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் பெரிதளவில் பயன்படுத்தப்படுவதாக கி.மு.2400 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. மேலும் ஒரு இது போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் நொடிக்கொருமுறையேனும் பயன்படுத்தப்படுமென திட்டவட்டமாகச் சொல்கிறது. தமிழ் இணையவெளியில் புழங்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தச் சொல்லினைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாதென்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்கள்

   “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல் பல விதங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தச் சொல்லினைக் கூட்டாக, பத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உச்சரிக்கும்போது நாய்கள் பயந்து ஓடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதேனும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாதவர்களுக்கு இந்தச் உடுக்கை இழந்தவன் கை போலப் பேருதவி புரிவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் ஏதேனும் கோபமான பொழுதுகளில் இந்தச் சொல்லினைப் பயன்படுத்துவது எதிராளியினைப் பெருமிதப்படுத்துவதோடு, அவரது கோபத்தினையும் சற்று குறைப்பதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் “அவ்வ்வ்” என்ற இதன் பயன்களை யாராலும், எந்தக் காலத்திலும் முழுமையாகச் சொல்லிவிட இயலாதென்பது மட்டும் திண்ணம்.

முடிவுரை

   தமிழ்மொழியில் மிக முக்கியச் சொல்லாக வலம்வரும் இந்த “அவ்வ்வ்” வின் தோற்றம் மற்றும் பயன்களை இந்தக் கட்டுரையின் மூலமாக நம்மால் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ளமுடிந்தது. மேலும் இந்தச் சொல்லினைக் கேட்கக் கேட்க அடுத்து இந்தச் சொல்லினை எப்பொழுது யார் வாயால் கேட்போமோ என்கிற ஏக்கம் நமக்கு வராமலிருப்பதில்லை. இந்தச் சொல்லின் பெருமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ள ஆங்கிலேயர்கள் “அவ்வ்வ்” என்ற சொல் ஆங்கில மொழிக்குச் சொந்தமானது என்று போராடத் துவங்கியுள்ளாதாகச் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எனவே நமது தமிழ் மொழியின் மிக முக்கியச் சொல்லான “அவ்வ்வ்”வினைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனை பிறர் கவர்ந்து கொள்ளக் கூடாததன் பொருட்டுமே இந்தக் கட்டுரையை அவசரகதியில் எழுதநேர்ந்தது. எனவே எல்லோரும் சேர்ந்து போராடுவோம் “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”!


Saturday, February 4, 2012

தங்கம்

முன்குறிப்பு : குழந்தைகளுக்கான சிறுவர் நீதிக் கதைகள் வரிசையிலான எனது முதல் சிறுகதை முயற்சி இது.

முன்னொரு காலத்தில் மயிலூர் என்னும் சிற்றூரில் விவசாயி ஒருவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் தனது மாடு, கன்றுகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் தனது வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் சிலவற்றை வைத்திருந்தார். அவற்றில் தங்கப் பாத்திரத்தை மட்டும் தன்னிடமிருந்த அழகான பெட்டியொன்றில் வைத்துப் பாதுகாத்துவந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு தங்கப் பாத்திரங்களை மட்டும் தனியாக எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, தங்கப் பாத்திரம் இருந்த பெட்டியில் பித்தளைப் பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வழக்கம்போலவே தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.

தன்னைத் தங்கம் இருந்த இடத்தில் வைத்ததற்கு பித்தளைக்கு ஆணவம் ஏற்பட்டது. தங்கத்தைப் பலவாறு ஏளனம் செய்தது. தங்கம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அமைதியாக இருந்தது.

பித்தளையின் இந்த ஏளனத்தை வெள்ளிப் பாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தது. அதுவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த திருடன் அங்கிருந்த முக்கியமான பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தங்கப் பாத்திரமென நினைத்து, அதனைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.

மாலையில் வீடு திரும்பிய அந்த விவசாயி தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், ஊரெல்லாம் பேசப்பட்ட அந்தத் திருடனின் வேலையாகத்தான் இருக்குமென்று ஊகித்துக் கொண்டு வேக வேகமாக வந்து குப்பைத் தொட்டியைப் பார்த்தார். 

அங்கே அவர் தூக்கி வீசிய தங்கப் பாத்திரம் அமைதியாகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தார் விவசாயி. இந்தத் தங்கப் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர் அதனைக் குப்பையில் வீசி எறிந்தார் என்பதை தங்கமும், வெள்ளியும் புரிந்துகொண்டன.