Tuesday, March 1, 2016

shortfundly.com

ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்கவோ செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. தன் கதையைக் கேட்கும் அந்த இன்னொரு மனிதனையோ, மனிதக் கூட்டத்தையோ எங்கே போய்த் தேடுவது? இப்படி நிறைய ஃபேக்டுகளை எழுதிக் கொண்டே போய் கடைசியில் நீங்களாகவே கண்ணை உருட்டி முறைத்து என்னதான் சொல்ல வர்ற என்று கேட்பதற்கும் முன்பாக நான் சொல்லவருகின்ற மேட்டர் குறும்படங்கள் குறித்தானது. யார்கிட்டயாச்சும் இத சொல்லியே ஆகனும் என்று ஒரு கதை உருவாகிவிட்ட பின்பு அதனை ஒரு குறும்படமாக உருவாக்கி எல்லோருக்கும் தெரிந்த யூ-ட்யூபில் போட்டுவைக்கலாம். ஆனால், எத்தனை பேர் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள்? எங்கிருந்து காசு கொடுத்துப் பார்வையாளர்களைக் கூட்டிவந்து வித்தை காட்டுவது? இப்படியான குழப்பங்களுக்கான பதில்தான் Shortfundly.com!

குறும்படங்களுக்கான ஒரு கச்சிதமான மேடையாக shortfundly தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் எந்தவொரு குறிப்பிட்ட படைப்பும் ( அது எழுத்து வடிவமோ, வீடியோ வடிவமோ ) எத்தனை பேரைச் சென்றடைகிறது என்பது அதனைப் பகிரும் நபரின் பிரபலத்தைப் பொறுத்த விசயம். புதிதாக சோசியல் மீடியாக்களில் நுழைந்திருக்கும் எவருக்கும் உடனேயே ஆயிரம் ஃபாலோயர்களோ, ஃபேஸ்புக்கில் நூறு லைக்குகளோ கிடைத்துவிடாது. அதற்கெல்லாம் நிறைய மொய் வைக்க வேண்டும். நீங்கள் என்னதான் அட்டகாசமாக எழுதினாலும் அதனைப் படித்து நன்றாக இருப்பதாக நாலு பேரிடம் சொல்லும் அளவிற்காவது சில ஃபாலோயர்கள் வேண்டும்தானே? அப்படியான ஒரு ஃபாலோயருமே இல்லாவிட்டால் நீங்கள் எத்தனைதான் செலவு செய்து, ஹாலிவுட்டிலிருந்து டெக்னீசியன்களைக் கூட்டி வந்து, வெறித்தனமாக ஒரு குறும்படத்தை எடுத்திருந்தாலும் யார் பார்ப்பார்கள்? எப்படி அந்தப் படத்தினை நாலு பேர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது?

ஃபேஸ்புக்கில் பர்சனலாகச் சொல்லலாம். நீங்கள் அப்படிப் பர்சனலாகச் சொல்லும் நபர் அதற்குப் பிறகு உங்களை ப்ளாக் செய்துவிடுவார். வாட்சப்பில் வந்து பாருங்கள் என்று கூப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், நம் காண்டாக்ட் லிஸ்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் எத்தனை MB டேட்டா தீரும் என்று கணக்கிட்டுச் சொல்வதற்காக CA முடித்த கணக்காயர்களைப் பக்கத்திலேயே வைத்துக் கணக்கிட்டு ஒவ்வொரு ஸ்மைலியையும் தலையை வெட்டி, காலை வெட்டி அனுப்பிக் கொண்டிருக்கும் சிக்கனச் சிகரங்கள். ஆகவே, அவர்கள் வந்து அந்தப் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்வதற்குள்ளாக நமக்கு இந்த சிஸ்டமே சரியில்லை மச்சி என்ற எண்ணம் மனத்தில் வேறூன்றியிருக்கும். 

ஒரு படைப்பாளன் தனது படைப்பினை நாலு பேரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இத்தனை இடையூறுகளா என்று வெகுண்டெழுந்து shortfundly.com தளத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். நாலு பேர் என்ன நாலு பேர், நாங்க நாலாயிரம் பேர் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறோம் பாக்குறியா, பாக்குறியா என்று சிங்கம் சூர்யாவைப் போல கர்ஜித்துக் கொண்டே shortfundly தளத்தினைக் குறும்படங்களுக்கென்றே பிரத்யேகமாக அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

கடந்த 2014, அக்டோபர் மாதத்தில் துவக்கப்பட்ட இந்தத் தளத்தில் இந்திய மொழிகள் பலவற்றிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட 25,000 குறும்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. எத்தனை இயக்குனர்கள், நடிகர்கள், டெக்னீசியன்கள் இருக்கிறார்கள் பாருங்கள். எல்லோருக்கும் சரியான வாய்ப்புக்கள் கிடைத்தால் மொத்த ஆஸ்கார் அவார்டையும் Fedex கொரியரில் போட்டு, இந்தியாவிற்கு எடுத்துவந்துவிடலாம். எழுநூறுக்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளார்கள். ஒருநாளைக்குச் சராசரியாக பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் இந்தத் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.

Youtube என்று வீடியோக்களுக்கென்றே தனித்தொரு தளம் இருக்கும்போது எப்படி இந்தத் தளத்தின் வழியாக அதிகப் பார்வையாளர்களைப் பெற முடியும் என்று தோன்றலாம். யூ-டியூப் குறும்படங்களுக்கு மட்டுமானதில்லை. தவிரவும், யூ-டியூப் அதில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு வீடியோக்களையும் பர்சனலாகப் ப்ரமோட் செய்வதில்லை. யூ-டியூபைப் பொறுத்தவரையிலும் கடலுக்குள் வீசப்பட்ட ஒரு துளி மழை நீராக உங்களின் குறும்படங்கள் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆனால், shortfundly தளத்தில், அதில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு வீடியோவையும் தனித்தனியாக சோஷியல் மீடியாக்களில் ப்ரமோட் செய்கிறார்கள். பதிவேற்றப்பட்டு ஒரே நாளில் குறைந்தபட்சம் நூறு நபர்களாவது உங்களது குறும்படத்தைப் பார்வையிடுவார்கள் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

இந்தத் தளத்தின் இன்னொரு சிறப்பம்சம் குறும்படங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் குவித்து வைப்பதே. யாருமே எனது குறும்படங்களைப் பார்க்காவிட்டாலும் சரி, நான் குறும்பட விழாக்களுக்கு அனுப்பி, அவார்டு வின்னிங் குறும்படம் என்று யூ-ட்யூபில் போட்டு, ஆயிரம் லைக்குகளை அள்ளிவிடுவதென்று முயற்சித்துக் கொண்டிருப்பேருக்கும் இவர்களிடம் ஒரு சீப்பு இருக்கிறது. அதாவது, எப்பொழுது, எங்கே குறும்படங்களுக்கான போட்டிகள் நடக்கின்றன என்பது குறித்த அனைத்து தகவல்களையும் இவர்கள் தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், shortfundly தளத்தில் பதிவு செய்து கொண்ட குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்பட விழாக்கள் குறித்துத் தனி மெயிலும் அனுப்பப்படுகிறது. அதனால் உங்களது மூளையின் RAM மெமரியைக் கழட்டி வைத்துவிட்டு, 30 நாட்களில் ஆஸ்கார் வாங்குவது எப்படி என்ற புத்தகத்தைத் திருப்தியாகப் படிக்கலாம்.

இவையெல்லாவற்றையும் விட காசு பணம் துட்டு விசயத்திலும் கொஞ்சம் உதவ முடியும் என்கிறார்கள். crowd funding மூலமாக உங்களின் குறும்படத்தைப் பெரும்படமாக உருவாக்கவோ, அல்லது குறும்படங்களுக்கான இயக்குனர்களை, தயாரிப்பாளர்களைப் பெறவோ நாங்கள் ஒரு பாலமாக இருப்போம் என்றும் நம்பிக்கை தருகிறார்கள். குறும்படங்களில் வேலை தேடுவோரும் கூட இங்கே தங்களுக்கான வேலைகளைத் தேடிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஆக, உங்களிடம் இருக்கும் கதையைக் குறும்படமாக எடுத்துவிட்டீர்களானால் போதும். அடுத்தடுத்த காரியங்களைக் கனகச்சிதமாகச் செய்ய shortfundly.com உள்ளது!

Friday, February 12, 2016

சிமோனிலா கிரஸ்த்ரா

சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். பெயரிடப்படாத சிறுகதை என்கிற கதை மட்டும் சிறுகதைத் தொகுப்பிற்காகப் புதிதாக எழுதியிருப்பார் போலும். பார்வதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இரண்டாவது படைப்பான இந்தச் சிறுகதைத் தொகுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.

மாதவனின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் மொழியைக் கையாளும் விதம். மிக இயல்பாகவும், எளிமையாகவும் அதே சமயம் ஆர்வமூட்டும் விதமாகவும் இருக்கும் அவரது மொழிநடை அடிக்கடி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றிரண்டு கதைகளை நான் ஏற்கெனவே வாசித்திருந்தாலும் மொத்தமுள்ள 15 கதைகளில் 13 கதைகள் எனக்குப் புதியவை. ஏற்கெனவே வாசித்த இரண்டு கதைகளையும் மறுபடியும் படித்துப்பார்த்தேன். அதே சுவாரஸ்யம். முடிவு தெரிந்தும் திரும்பவும் பார்க்கும் படத்தினைப் போல அதே வசீகரத்துடன் இழுத்துச் செல்லும் அந்த மொழிநடைக்காகவே மறுபடியும் படித்தேன்.

சிறுகதைகள் பல்வேறு தளங்களில், வகைமைகளில் எழுதப்படுகின்றன. முன்னுரையில் வா.மு.கோமு குறிப்பிட்டிருந்ததைப் போலவே கிட்டத்தட்ட பதினைந்து கதைகளுமே வெவ்வேறு தளங்களை மையமாகக் கொண்டவையாக எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு வகையிலுமே நிச்சயம் பாராட்டத்தக்க கதையாக அந்தக் கதைகள் அமைந்திருப்பதாகவே தோன்றியது.

ஒரு பழங்கதை, கருக்கல், பெயரிடப்படாத சிறுகதை, சிமோனிலா கிரஸ்த்ரா, ஜெமியின் காதலன் ஆகிய கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். நிச்சயம் சலிப்பினைத் தராதவையாக இருக்கும். என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறுகதைகளில் ஒரு பழங்கதையும், பெயரிடப்படாத கதையும் எப்பொழுதும் நினைவிலிருக்கும்.

கருக்கல் கதையில் வரும் எளிய மனிதர்களும், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கான பிரச்சினைகளும், சட்டென வெளியேற முடியாத இயல் வாழ்க்கையின் கிடுக்கிப் பிடியும், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் கையறு மனநிலையும், அதில் மாட்டிக் கொண்டாலும் அன்பானவர்களுக்காக எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என்கிற செல்வியின் மன நிலையும் அன்பாலான உலகத்தைக் காட்டுகிறது.

சம்சாரி மற்றும் கலந்துரையாடல் ஆகிய கதைகள் கதைத் தொகுப்பிற்கான திருஷ்டிக் கழிப்பிற்காக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம். மீதமுள்ள 13 கதைகளும் நிச்சயம் ஒரு அட்டகாசமான வாசிப்பிற்கானவை என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கதை சொல்லல் முறையில் புதுப்புது வடிவங்களை முயற்சித்து, அதில் வாசிப்பாளர்களை ’அட’ போட வைக்கும் மாதவனின் எழுத்து பாராட்டப்பட வேண்டியது.

ஏற்கெனவே படிக்காதவர்கள் இந்த (சிமோனிலா கிரஸ்த்ரா ) இணைப்பில்  புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். ஏற்கெனவே படித்தவர்கள் மறுபடியும் வாங்கிப் படிக்கலாம். அல்லது உங்களது நண்பர்களுக்குப் பரிசாக அனுப்பலாம். ஒரு நல்ல எழுத்தாளரை உங்களின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி உங்களுக்கும், ஒரு நல்ல எழுத்தைப் படித்த மகிழ்ச்சி உங்கள் நண்பர்களுக்கும் ஏற்படும் என்பதை மிகத் தைரியமாகவே, மிகு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.


Saturday, January 30, 2016

டிஃபன் பாக்ஸ்!

சரியாகப் பதினொரு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவமனை அதுதானென்று மகள் சொன்னாள். எங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியிருக்கிறது. பெரும்பாலும் ஒரு ப்ராஜக்டினை முடிப்பதற்கு குறைந்தபட்சமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை இரண்டே வாரங்களில் முடிவடைந்துவிடும் போலத்தான் இருக்கிறது.

" மொத்தமா எவ்ளோ பேசிருக்க?"

"எட்டு லட்சம்ப்பா"

"அட்வான்ஸ் கொடுத்துட்டாங்களா?"

"போனவாரத்துலயே 2 லட்சம் கொடுத்துட்டாங்க. ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா மீதிப் பணத்தைத் தந்துடறதா சொல்லிருக்காங்க"

இரண்டு வாரங்களில் எட்டு லட்சத்திற்கு அப்படியென்ன ப்ராஜெக்ட், அதுவும் மனநல மருத்துவமனையில்? நானும் என் மகளும் பெரிய பெரிய மருத்துவ உபகரணங்களை விற்பதிலோ அல்லது வேறெதேனும் மருந்துக் கம்பனிகளிலோ வேலை பார்க்கவில்லை.  இத்தனைக்கும் என் மகளும் நானும் சேர்ந்து செய்யும் முதல் ப்ராஜெக்ட் இதுதான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக எனக்கு இந்த டிஃபன் பாக்ஸ் கிடைத்து, அதைக் கொண்டு இப்படியும் சம்பாதிக்கலாமென்று தெரியவந்ததிலிருந்து இப்போது வரைக்கும் நான் ஒருவன் மட்டுமே இந்த பிசினஸைச் செய்துவருகிறேன். இதை பிசினஸ் என்று கூறமுடியாதுதான். சேவையென்று கூறலாம். யாரோ ஒருவருக்குப் பயன்பட்டாலும் அது சேவைதானே?

அப்படியென்ன சேவை இது? என்னிடம் ஒரு டிபஃன் பாக்ஸ் இருக்கிறது. இதை ஒரு மூன்று அமாவாசைகள் மூடி வைத்திருந்துவிட்டு, மூன்றாவது அமாவாசை அன்று நண்பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாகத் திறந்தோமானால் யார் அதைத் திறக்கிறார்களோ அவர்கள் முழுப் பைத்தியமாகிவிடுவார்கள். சந்தேகமே வேண்டாம். உண்மைதான். இது வரையிலும் எத்தனையோ நபர்களை இப்படிப் பைத்தியமாக மாற்றியிருக்கிறேன். கடந்த ஆறேழு வருடங்களாக நானும் என் குடும்பமும் செல்வச் செழிப்பாக வாழ்ந்து வருவதற்கு இந்த டிபஃன் பாக்சின் அதிசயச் சக்திதான் காரணம். டிபஃன் பாக்சைத் திறக்கிறவர் பைத்தியமாகிவிடுவார் என்பதையே நம்பமுடியாதுதான். ஒரு பேச்சுக்கு அதனை நம்பினாலும், இப்படிக் கெட்ட சக்தியைக் கொண்ட ஒரு அதிசயப் பொருளைக் கொண்டு எப்படிச் சம்பாதித்து வாழ முடியும்? உண்மையில், நல்ல பலன்களைத் தரும் அதிசயப் பொருளாக இது இருந்திருந்தால் கூட இத்தனை சம்பாதித்திருப்போமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. நம் ஊரில் அடுத்தவனின் வளர்ச்சியில் சிரிப்பவர்களைக் காட்டிலும், வீழ்ச்சியில் சிரிப்பவர்கள்தானே அதிகம்? நம்மூரில் மட்டுமில்லை. உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுமே இப்படித்தான். பொறாமையும் மனித மனத்தில் விளைகிற விசயம்தானே?

நாங்கள் போய்க்கொண்டிருக்கும் இந்தப் ப்ராஜெக்டும் கூடப் பொறாமையால் உருவானதுதான். இந்த நகரத்தில் இருக்கும் மிக முக்கியமான, மிகப் பிரபலமான மனநல மருத்துவரான இவரைப் பைத்தியமாக்கிவிடுவதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் எட்டு லட்சம் ரூபாய் பிசினஸ் பேசியிருக்கிறோம். எங்களிடம் இருக்கும் இந்த டிபஃன் பாக்ஸைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. நாங்கள் இப்படியொரு சேவையைச் செய்கிறோம் என்று மட்டும் ஒரு சிலருக்குத் தெரியும். எங்களிடம் சொல்லிவிட்டால், அவர்கள் காட்டும் அந்தக் குறிப்பிட்ட நபரை மூன்று மாதங்களுக்குள்ளாக எப்படியும் பைத்தியமாக்கிவிடுவோம் என்பது மட்டுமே எங்களின் க்ளையண்டுகளுக்குத் தெரியும். எப்படிப் பைத்தியமாக்குகிறோம் என்பதோ, எதனால் அவர்களின் எதிரிகள் பைத்தியமாகிறார்கள் என்பதோ என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எங்களிடம் ஏதோ அதிசயச் சக்தி இருக்கிறது என்று மட்டும் பேசிக்கொள்கிறார்கள். பில்லி, சூனியம், பேய், பிசாசு வேலைகளாக இருக்குமென்றும் கூடச் சிலர் சந்தேகிப்பதுண்டு. ஆனால், டிபஃன் பாக்ஸைப் பற்றி எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. 

ஒரு ப்ராஜெக்டை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாங்கள் யாரைப் பைத்தியமாக்க ஒப்புக் கொண்டோமோ அவர்களுடன் எப்படியாவது நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுவோம். இந்த டிபஃன் பாக்ஸின் அதிசயச் சக்தி வேலை செய்ய வேண்டுமானால் மூன்று அமாவாசைகள் வரையிலும் காத்திருக்க வேண்டும். அதற்காகத்தான் ஒரு ப்ராஜெக்டை ஒப்புக் கொண்டதிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு கேட்பது. அந்த மூன்று மாத காலத்திற்குள் எங்களது டார்கெட்டுடன் நாங்கள் நெருக்கமாகிவிடுவோம். அந்த மூன்றாவது அமாவாசை தினத்தன்று பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாக எங்களது டார்கெட்டை எப்படியாவது அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்குமாறு செய்துவிடுவோம். அப்படித் திறந்துவிட்டால் போதும். எங்களின் ப்ராஜெக்ட் முடிவடைந்துவிடும். அந்த டிபஃன் பாக்ஸைத் திறந்த அந்த நபர் அன்றிலிருந்து முழுப் பைத்தியம்தான். கடந்த ஏழு வருடங்களாக டிபஃன் பாக்ஸைத் திறந்துவிட்ட எல்லா மனிதர்களுமே இப்போது வரையிலுமே பைத்தியமாகத்தான் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சில தடவைகள் மட்டும் எங்களின் திட்டம் பலிக்காமல் போயிருக்கிறது. அதாவது அந்தக் குறிப்பிட்ட நாளில் நாங்கள் எங்களது டார்கெட்டைச் சந்திக்க முடியாமல் போனதாலோ அல்லது வேறெதேனும் காரணங்களாலோ அப்படி நேர்ந்ததுண்டு. அப்படி ஆகிவிட்ட சமயங்களில் அடுத்த மூன்றாவது மாதம் வரையிலும் காத்திருந்து சில ப்ராஜெக்ட்டுகளை முடித்திருக்கிறோம். அதனால்தான் எங்களின் சேவைக் கட்டணம் இப்பொழுதெல்லாம் லட்சங்களில் போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் ப்ராஜெக்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்காக எங்களுக்கு வருத்தமெல்லாம் இல்லை. ஏனென்றால், அந்த டிபஃன் பாக்ஸிற்குச் சக்தி கிடைப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறபடியால் எப்படியும் ஏதேனுமொரு ப்ராஜெக்ட் கிடைக்குமென்று காத்திருந்தோம். அப்படியாகக் கடந்த வாரத்தில் கிடைத்ததுதான் இந்த மனநல மருத்துவரது ப்ராஜெக்ட். இந்த நகரத்தில் இருக்கும் மற்றொரு மனநல மருத்துவர்தான் எங்களது க்ளையண்ட். எங்களது நகரத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய மனநல மருத்துவர் அவர். அவர் சொல்லித்தான் இவரைப் பைத்தியமாக்குவதற்காக, முழு அமாவாசை நாளான இன்று, டிபஃன் பாக்ஸுடன் கிளம்பிவிட்டோம்.

************
கதை சொல்லியின் மகளான நான் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பாக எங்களது டார்கெட் என்று கதை சொன்னவர் கூறிய, இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவரைச் சந்தித்தேன்.

" எனக்கு எதும் பிரச்சினை இல்ல டாக்டர். எங்க அப்பாவுக்குத்தான்"

" என்ன பிரச்சினை? "

" அது வந்து... அவருக்கு என்னமோ ஆகிடுச்சு டாக்டர். திடீர் திடீர்னு என்னென்னமோ ஒளர்றாரு.."

" என்ன ஒளர்றாரு? "

" அடிக்கடி ஏதோ டிபஃன் பாக்ஸைப் பத்திச் சொல்றாரு.."

" டிபஃன் பாக்ஸைப் பத்தியா? உங்க வீட்டுல டிபஃன் பாக்ஸ் எதுவும் காணாம போயிடுச்சா? தெளிவா, பொறுமையா சொல்லுங்க."

" அதில்ல டாக்டர். அவர்கிட்ட எதோ டிபஃன் பாக்ஸ் இருக்கிறதாகவும், அதைத் திறக்கிறவங்க பைத்தியம் ஆகிடுவாங்கன்னும் சொல்லுறாரு டாக்டர். அடிக்கடி வீட்டுல இருக்கிற ஒரு டிபஃன் பாக்ஸை எடுத்து வந்து முன்னாடி நீட்டி, இதத் திறந்திடாத, திறந்துட்டா பைத்தியம் பிடிச்சுக்கும்னு சொல்றார். குறிப்பா அமாவாசைல அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்கறவங்க பைத்தியம் ஆகிடறதாகவும், அத வச்சு நாம மத்தவங்க கிட்ட அவங்களோட எதிரிகளைப் பைத்தியம் ஆக்குறதுக்கு பணம் வாங்கிக்கலாம்னு சொல்றார். எனக்கு ஒரே பயமா இருக்கு. பைத்தியம் ஆகிட்டு வர்றாரோன்னு டென்சனா இருக்கு டாக்டர்."

" ரொம்பவே கவனமா பாத்துக்க வேண்டிய கன்டிசன்தான். எத்தன நாளா இப்படி நடந்துக்கிறாரு?"

" இப்ப ஒரு ரண்டு மாசமாத்தான் . அந்த டிபஃன் பாக்ஸை வச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சதாகவும், அதன் மூலமா நாங்க வசதியா வாழ்றதாகவும் சொல்றார். அந்த டிபஃன் பாக்ஸோட அந்த கெட்ட சக்தி மூலமா ஏழெட்டு வருசமா இப்படி நிறையப் பேரைப் பைத்தியமாக்கினதாகவும், அத ஒரு பிசினசாகவே செஞ்சுட்டு வர்றதாகவும் அடிக்கடி ஒளர்றாரு டாக்டர். அவரு பைத்தியமாகிட்டாரா டாக்டர்?"

" கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துக்க வேண்டிய சிச்சுவேசன்தான். இப்படியே விட்றாதீங்க. எங்க இருக்கார் அவர்? ஏன் கூட்டிட்டு வரலையா? "

" வீட்லதான் டாக்டர் இருக்காரு. இப்படி சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங்குக்குப் போகனும்னு கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டார் டாக்டர்."

" வேற எதாச்சும் சொல்லிக் கூட்டிட்டு வரப் பாருங்க. பேசண்ட்ட நேர்ல பார்த்து விசாரிச்சாத்தான் என்னால எதுவும் சொல்லமுடியும். நேர நேரத்துக்கு சாப்பாட்டுக்கிறாரா? சரியா தூங்குறாரா?"

" சாப்பாடு, தூக்கமெல்லாம் நார்மலாத்தான் இருக்கு டாக்டர். ஆனா, ஏன் இப்படிப் பண்ணுறார்னுதான் தெரியல. ரொம்ப பயமா இருக்கு டாக்டர்."

" ஒன்னும் பயப்பட வேண்டாம். நாளைக்குக் காலைல அவரைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நாலஞ்சு நாள் இங்க இன்பேசண்ட்டா வச்சு கவனிச்சுக்கிட்டா சரி பண்ணிடலாம். இதவிட மோசமான கேசெல்லாம் பாத்திருக்கோம்."

" நாளைக்குக் கூட்டிட்டு வர்றது சிரமம் டாக்டர். என்னதான் க்ளினிக் வாசல் வரைக்கும் வந்தாலும், அதுக்கு அப்புறம் தெரிஞ்சுட்டு, எங்கிட்ட சண்டைப்போட்டுட்டு திரும்பிப் போய்டுவார் . இதுக்கு முன்னாடி ஒரு தடவ வேறொரு சைக்யாட்ரிஸ்ட் கிட்டப் போகும்போது அப்படித்தான் நடந்துக்கிட்டாரு."

" அவர அப்படியேவும் விட முடியாதே? "

" மயக்க மாத்திரை, தூக்க மாத்திரை எதுவும் கொடுத்து தூக்கிட்டு வந்துடலாமா டாக்டர்? "

" அந்த லெவலுக்கெல்லாம் போக வேண்டாம். ஒன்னு பண்ணுங்க. அவரு வழிலையே போய் கூட்டிட்டு வாங்க. அவர் எதோ டிபஃன் பாக்ஸ்ஸ வச்சு பைத்தியமாக்கி சம்பாதிக்கறதா ஒளர்றாருன்னு சொன்னீங்கள்ல, அப்படி ஒருத்தரப் பைத்தியமாக்கனும்னு சொல்லி, அந்த டிபஃன் பாக்ஸையும் எடுத்து அவர் கைல கொடுத்துட்டு இங்க கூட்டிட்டு வந்துடுங்க. அப்புறம் நான் பார்த்துக்கிறேன். டோன்ட் வொர்ரி"

" அப்படியே சொன்னாலும் அவர் அமாவாசை அன்னிக்குத்தான் அந்த டிபஃன் பாக்ஸோட சக்தி வேலை செய்யும்னு சொல்லி, அமாவாசையன்னிக்குப் போலாம்னு சொல்லுவார் டாக்டர்." 

" அப்டியா. இருங்க, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அமாவாசை வருதான்னு பார்ப்போம். இல்லன்னா தூக்க மாத்திரை கொடுத்து தூக்கிட்டு வந்துடலாம். உங்களுக்குப் பின்னாடி இருக்கிற காலண்டர்ல எப்போ அமாவாசைன்னு பாருங்க."

" இன்னும் ஒரு வாரத்துல அமாவாசை வருது டாக்டர். ஃப்ரைடே"

" குட். அப்போ ஒன்னும் பிரச்சினையில்லை. ஃப்ரைடே அன்னிக்கே கூட்டிட்டு வாங்க. மயக்கப்படுத்திக் கூட்டிட்டு வர்றது பெரிசில்ல. ஆனா, அதனாலயே அவர் மேலும் பயந்துக்கலாம். அதுக்காகத்தான் இப்படி."

"தேங்க் யூ டாக்டர். நீங்கதான் அவரோட டார்கெட்டுனு சொல்லித்தான் கூட்டிட்டு வரப்போறேன். தப்பா நினைச்சுக்காதீங்க டாக்டர். எனக்கு வேற வழி தெரியல"

" டோன்ட் வொர்ரி. இந்த மாதிரி நாங்க நிறையப் பார்த்திருக்கோம்."

******

எவ்வளவு பெரிய மருத்துவமனை! எத்தனை எத்தனையோ மனநலம் குன்றியவர்களைத் தேற்றி அனுப்பியவரென்று பெயரெடுத்தவர். பாவம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரே பைத்தியமாகப் போகிறார். இத்தனை நாளும் எத்தனையோ மனிதர்களை இந்த டிபஃன் பாக்ஸைத் திறக்க வைத்துப் பைத்தியமாக்கியிருக்கிறேன். ஆனால், இன்று மட்டும் ஏனோ கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும். காசு வாங்கியாயிற்றே. அடுத்தது எங்கள் டோக்கன்.

" குட்மார்னிங் டாக்டர். இவர்தான் எங்க அப்பா"

" வாங்க வாங்க. ப்ளீஸ் சிட் டவுன். என்ன விசயம்? "

" தெரில டாக்டர். அப்பாதான் உங்களப் பார்க்கனும்னு சொன்னார். " 

என் மகள் டாக்டரிடம் ஏதோ சைகை செய்யவும், அவரும் தலையசைத்துக் கொண்டு என்னிடம், " சொல்லுங்க சார், என்ன விசயம்?"

" அது வந்து... எதுக்கு உங்களப் பார்க்கனும்னு சொன்னேன்னா... வந்து வந்து.. மறந்துடுச்சு.."

" நல்லா யோசிச்சுப் பாருங்க."

" ஒரு நிமிசம் டாக்டர். உங்களப் பார்க்கனும்னு தோணினவுடனே ஒரு காகிதத்தை எடுத்து எதுக்காகப் பார்க்கனும்னு நினைக்கிறேன்னு ஒரு பேப்பர்ல எழுதினேன். அத எங்க வச்சேன்? பாக்கெட்லயும் காணோம். ஆ, இந்த டிபஃன் பாக்ஸ்ல வச்சேன். இருங்க திறந்து எடுத்துப் பார்க்கிறேன்."

" ஹவ் ஸ்வீட் யூ ஆர். வெரி ப்ரேவ்" என்று கூறிக் கொண்டே என் மகளைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிக் கொள்கிறார். பாவம். இப்பொழுது இந்த டிபஃன் பாக்ஸை அவரிடம் நீட்டித் திறக்கச் சொல்லப் போகிறேன். அப்புறம் முழுப் பைத்தியம்தான்.

" என்னால் திறக்க முடியல டாக்டர். நீங்க திறந்து பாருங்களேன்"

" குடுங்கப்பா நான் திறக்கறேன்... "

"நோ.. டாக்டர் தான் திறக்கனும். உங்கிட்டவெல்லாம் காட்டமாட்டேன்.."

என் மகள் டாக்டரைப் பார்க்க, டாக்டரும் என் மகளைப் பார்த்து மீண்டும் கண் ஜாடையில் பொறுமையாக இருக்கச் சொல்கிறார். 

" குடுங்க சார். நானே திறந்து பார்க்கிறேன்... அவ்ளோ டைட்டாவா இருக்கு..?"

******

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது அந்தச் செய்தியைப் பார்க்க நேரிட்டது. எங்கள் நகரின் பிரபல மனநல மருத்துவர் என்று பெயரெடுத்த அந்த மருத்துவர் கடந்த இரண்டு தினங்களாக வினோதமாக நடந்து கொள்வதாகவும், என்ன காரணமென்றே தெரியாமல் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, நகரின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பெட்டிச் செய்தி கண்ணில் பட்டது.

" அப்பா, நம்ம ரண்டு பேரும் சேர்ந்து பண்ணின முதல் ப்ராஜெக்ட் க்ரேட் சக்ஸஸ். பேலன்ஸ் ஆறு லட்சம் கிரெடிட் ஆகிடுச்சு. அந்த டிபஃன் பாக்ஸ வழக்கம்போலவே அன்டர்கிரவுண்ட்ல வச்சுப் பூட்டிட்டேன். அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சு, மூனு மாசம் ஆகுற வரைக்கும் அது அங்கயே இருக்கட்டும்." என்று சிரிக்கிறாள் மகள்.

Friday, January 29, 2016

ஓவியம்!

சமீபமாகத்தான் இந்த வீட்டினை நல்ல விலை கொடுத்து வாங்கினான். வாங்கியதிலிருந்தே வித்தியாசமாகச் சில நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. வாங்கிவைத்திருக்கும் திண்பண்டங்களில் குறிப்பாக முறுக்குகள் மட்டும் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. இதுவரையிலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறுக்குகள் காணாமல் போயிருக்கும். இவன் ஒரு முறுக்குப் பிரியன் என்பதால் முறுக்குகளை மட்டுமே வாங்கி ஸ்டாக் வைத்திருந்தான். வேறெந்தத் திண்பண்டங்களையும் வைத்திருப்பதில்லை. பிடிக்கவும் பிடிக்காது.

இவற்றையெல்லாம் தின்பது எலியோ, புலியோ, குரங்கோ அல்ல. சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் ஒரு ஓவியம். ஆச்சர்யமாக இருக்கிறதா? அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் முறுக்கினைக் கையில் வைத்திருப்பது போன்ற அந்த ஓவியம் இவனது அலமாரியில் இருந்து முறுக்குகளைத் திருடித் தின்று கொண்டிருந்தது. யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? நம்புவது கூடப் பிரச்சினையில்லை. யாரிடமாவது போய் “ என் ரூம் செவுத்துல இருக்கிற ஒரு படம் முறுக்க எடுத்துத் திங்குதுங்க” என்று சொன்னால் சிரிக்கமாட்டார்களா?

ஆனால், அதுதான் உண்மை. உண்மையை யார் நம்புகிறார்கள்? அது அலமாரியில் வைக்கப்படும் முறுக்கினைத் தின்றுவிடுகிறது என்பது தெரிந்ததும் வேறு இடத்திற்கு மாற்றினான். எங்கு மாற்றினாலும் முறுக்கென்று அந்த அறைக்குள் வந்தால் அது அந்த ஓவியத்திற்காகத்தான் இருந்தது. முறுக்குகளுக்கும் அந்த ஓவியத்திற்கும் ஏதோ பூர்வஜென்மத் தொடர்பு இருக்க வேண்டும்.

அந்த ஓவியம் வேறெதையும் செய்யவில்லை. முறுக்கினை மட்டும் திருடித்தின்றது. மற்றபடி பேசவோ, பாடவோ, கேர்ள்ஃபிரண்டுக்கு போன் செய்யவோ இல்லை. ஓவியத்தை அழித்துப் பார்த்தான். கட்டிடத்தை இடித்தாலும் இந்த ஓவியம் மட்டும் காற்றில் அதே இடத்தில் அதே உருவத்தில் இருக்கும்போலத் தெரிந்தது. இந்த வீட்டினை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு வாடகை வீட்டிற்காவது போய்விடவேண்டுமென்று நினைத்தான். உடனே எப்படி?

வீட்டினை விற்கும் வரைக்கும் இங்கேயே இருந்துதானே ஆகவேண்டும். அதுவரைக்கும் தனக்கு இருக்கும் முறுக்குத் தின்னும் ஆசையினைக் கைவிடுவதற்காக வேறு திண்பண்டங்களைத் தேடிப்போனான். முறுக்கினை அடுத்து இவனுக்குப் பிடித்த திண்பண்டமென்றால் அது லட்டுதான். 

சில லட்டுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தால் அந்த ஓவியத்தின் கையில் இப்பொழுது முறுக்கிற்குப் பதிலாக லட்டு இருந்தது.

Sunday, January 3, 2016

இறக்கை

இப்படியெல்லாம் நடக்குமா என்ன? சாதாரணமாகச் சொல்லப்போனால் முடியை வளரவைப்பதற்கே ஒவ்வொருவரும் எத்தனையோ பிரயாசைகளைச் செய்துவரும் சூழலில் வெட்டித்தனமாகக் கற்பனை செய்ததற்கே இப்படி நேர்ந்துவிடுமா? நேர்ந்துவிட்டதே! இதைத் தலையெழுத்து என்று சொல்லி விலக்கிவிடமுடியுமா என்ன? விலக்கிவிடுவதானால் விலகிவிடலாமே? இப்படியெல்லாம் நடக்குமென்று முன்பே தெரிந்திருந்தால் இப்படியொரு கற்பனையை நான் ஏன் செய்யப்போகிறேன்? கற்பனைகள் நம் கட்டுப்பாட்டில் நிகழ்வதில்லை என்றாலும் ஒரு முயற்சியாவது செய்து கவனத்தைத் திருப்பியிருக்கமாட்டேனா? ஒரு நிமிடக் கற்பனை என் வாழ்க்கையையே பணயமாய்க் கேட்கிறதே?

அப்படியென்ன நிகழ்ந்துவிட்டது எனக்கு? ஒன்றுமில்லை. ஆனால் என் வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. சொல்கிறேன் கேளுங்கள். அதற்கு முன்னர் நீங்களும் ஒரு கற்பனைக்குள் வரவேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கிறீர்கள். பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகத்தானே காத்திருப்பார்கள் என்று கேட்கலாம். எல்லோரும் அப்படியல்ல. சரி விடுங்கள். அந்தப் பேருந்து நிறுத்தத்திலேயே உங்களுக்கு மிக அருகிலேயே ஒரு அழகான பெண்ணும் நிற்கிறார். அழகென்றால் நீங்கள் கதைகளிலும், வர்ணனைகளிலும் படித்த அந்த அழகான பெண். இப்போது உங்கள் உடலில் உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு, அந்த உந்துதலினால் என்னென்னவோ கற்பனைகளைச் செய்கிறீர்கள். என்னென்ன கற்பனைகள் என்று என்னைக் கேட்டால்? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கற்பனை செய்கிறீர்கள். சமூக ரீதியாக மறுக்கப்பட்டவைகளையும், நமக்கு நாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளாலும் நாம் விரும்பியதை அடையமுடியாத நிலையில் நமது ஆசைகளைக் கற்பனைகளின் வழியாகத்தானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கற்பனைகளிலும் ஒரு வசதியிருக்கிறது. உண்மையில் நடப்பவைகளினால் ஏற்படும் பின்விளைவுகள் கற்பனையில் ஏற்படவாய்ப்பில்லை. இதைத்தான் கற்பனையின் பலமென்று நான் நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால் இப்படி நடக்குமென்று நானா கண்டேன்? 

பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் கண்ட பெண் சில மாதங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்து, நீங்கள் அன்று செய்த கற்பனையினால் தான் கருவுற்றிருப்பதாகக் கூறினால் அப்போது என்ன செய்வீர்கள்? “எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று பாடிக்கொண்டு, ஆரஞ்சு மிட்டாயும், கல்கண்டும் வாங்கி வருவோர் போவோரிடம் கொடுப்பீர்களா ? அப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இதனைக் கற்பனை செய்யவும் முடியுமா? நான் ஏன் அப்படிக் கற்பனை செய்யப்போகிறேன்? நான் ஒழுக்கமானவன் என்றுதானே இப்போது சிந்திக்கிறீர்கள்? நானும் கூடத்தான் ஒழுக்கமானவன்.

இந்தியக் கலாச்சாரத்தில் ஒழுக்கமானவன் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம்தானே உள்ளது? ஆணோ பெண்ணோ திருமணம் வரையிலும் கன்னித்தன்மையுடன் இருப்பது மட்டும்தானே நமக்குக் கூறப்படும், போதிக்கப்படும் ஒழுக்கவியல் நெறிமுறைகள்? காமம் குறித்துப் பேசக்கூடாது, அது தவறென்று சொல்லவேண்டும், உள்ளூர விரும்பினாலும் வெளி உலகில் காமத்தில் எனக்கு ஈடுபாடில்லை என்று கூறிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தாலே ஒழுக்கமானவன்/ள் என்ற முத்திரைக்குத் தகுதியாகிவிடுகிறோம் இல்லையா? மற்றபடி பொது இடங்களில் எச்சில் துப்பலாம், மலக் கழிக்கலாம், குப்பைகளைக் கண்ட இடத்திலும் வீசி எறியலாம், பொதுச் சுவர்களில் கிறுக்கி வைக்கலாம், பூசணிக்காய்களையும், மதுக்குடுவைகளையும் நடு ரோட்டில் உடைத்துவைக்கலாம். இதெல்லாம் ஒழுக்கமானவன் என்கிற எனது முத்திரைக்கு எந்தவிதத்திலும் பங்கம் விளைவிக்காது. இதுதானே நமது கலாச்சாரம்? இதிலும் காதலர்களை முறைத்துப்பார்ப்பதும், வீட்டிலிருந்து தள்ளிவைப்பதும், அவர்களது உரிமைகளைப் பறிப்பதும், சாதி மாறியோ மதம் மாறியோ திருமணம் செய்துகொண்டவர்களை கொன்றுவிடுவதும் கூட அதி உயர் ஒழுக்கசீலர்கள் அல்லது கலாச்சாரக் காவலர்கள் என்ற முத்திரையைப் பெறத்தானே? இந்தியாவில் இதைவிடவும் ஒருத்தன் ஒழுக்கமானவனாக இருந்துவிடமுடியுமா? இதையெல்லாம் பின்பற்றும் நானும் ஒழுக்கமானவன்தான். இப்பொழுது எதற்கு ஒழுக்கத்தைப் பற்றிய பேச்செல்லாம். நான் ஒழுக்கமானவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு சிறு கற்பனையால் என் வாழ்க்கைதான் நரகமாகப் போகிறதே?

ஏன் எனக்கு மட்டும் இவ்விதம் நேர்ந்தது? இது எல்லோருமே கற்பனை செய்து பார்க்கிற ஒன்றுதான். கற்பனை செய்கையில் வானம் ஒரு புண்ணியதேசமாகத் தோன்றியது. ஆனால் கற்பனை உண்மையான போது மொத்த உலகமும் எனக்கு அந்நியமாகப் போய்விட்டதே? எப்படி இந்த உலகத்தினை எதிர்கொள்ளப்போகிறேன்?

ஆமாம். எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. 

இது ஏதோ உவமையென்று நினைத்துவிடவேண்டாம். உவமைகளிலும், உருவகங்களிலும் மட்டுமே படிக்கிற இந்த வாக்கியம் இப்பொழுது என் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது. உண்மையிலேயே எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. இதுதான் என் சோகத்திற்கும் இந்தப் புலம்பல்களுக்கும் காரணம்.

இறக்கை முளைத்தால் பறக்க வேண்டியதுதானே, எதற்காகப் புலம்பித் திரிகிறான் என்றா நினைக்கிறீர்கள்? கற்பனை செய்துகொண்டிருக்கையில் இறக்கை இருந்தால் எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று உங்களைப் போலத்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாக முளைத்துவிட்ட பிறகு இது பெரும் சுமையாக அல்லவா தெரிகிறது. இறக்கைகள் சுமையென்று கூறவில்லை. இறக்கை முளைத்ததால் என் வாழ்க்கையே சுமையாகப் போனதாகக் கூறுகிறேன்.

நேற்று இரவு தூங்கப் போகும்போதுதான் இந்தக் கற்பனை எனக்குள் உதித்தது. எனக்கும் குருவிகளுக்கு இருப்பதைப் போல இறக்கைகள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குமென்று நினைத்துக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். வானத்தில் பறப்பது என்பது எத்தனை இனிமையானதாக இருக்க வேண்டும்? பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டாம்; ஏன் என் இறக்கைகளை முதலீடாகக் கொண்டு நானே கூட ஒரு அதி விரைவுத் தபால் துறையினைத் துவங்கி என் வாழ்க்கையினை ஓட்டிவிடலாம் என்றுகூட நினைத்தேன். இதற்காகவே தூங்கும்போது வழக்கமாகக் கடவுளிடம் கேட்கும் சாதாரண வரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு “எனக்குக் குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டும்” என்று கும்பிட்டுக் கொண்டு தூங்கச் சென்றேன். 

என் வாழ்க்கையில் கடவுளிடம் கேட்ட எதுவுமே நிறைவேறியதில்லை. நானும் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள்  வேண்டும் என்ற வரத்தினைத் தவிர வேறெந்த வரத்தையும் கேட்டதில்லை. அது ஒருபோதும் நிறைவேறியதும் இல்லை. ஒருவேளை கடவுளே கூட பரீட்சையில் மதிப்பெண் பெறாததால் அவரது பெற்றோர்களுக்குப் பயந்து, உலக வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கடவுளாக மாறியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். 

இறக்கை வேண்டுமென்று கேட்டதெல்லாம் ஏதோ ஒரு மயக்கநிலையில்தான். தினமும் சாமி கும்பிடவேண்டுமென்பது அம்மாவின் அறிவுரை. “ என்னனு சாமி கும்பிடறது?” என்று என் சின்ன வயதில் நான் கேட்ட கேள்விக்கு “ நல்லாப் படிக்கணும்னு கும்பிடு” என்ற பதில் கிடைத்தது. அதையே கடந்த பதினேழு வருடங்களாக இன்றுவரையிலும்... இல்லை நேற்றுவரையிலும் கடைப்பிடித்துவந்தேன். கடவுள் மீது எனக்கு அவ்வளவு பெரிய மரியாதையோ நம்பிக்கையோ இல்லை. இருந்தாலும் அம்மாவின் அறிவுரைக்காக இதனைச் செய்துவந்தேன். நல்லாப் படிக்கணும் என்று இத்தனை நாட்களாக நான் கேட்ட வரத்திற்கு எந்தப் பதிலும் இல்லாமல், நேற்றுப் புதிதாகக் கேட்ட வரத்தினை உடனே கொடுத்திருப்பதன் நோக்கம்தான் என்ன? ஒருவேளை சுயமாகக் கேட்கும் வரங்களை மட்டும் கொடுப்பதென்பது கடவுள் உலகின் கொள்கைகளா?

ஆனாலும் இந்தக் கடவுள் செய்திருக்கும் செயல் நகைக்கத்தக்க செயலாகவல்லவா இருக்கிறது? ஒரு கணிப்பொறியைப் போலவோ இல்லை எந்திரத்தைப் போலவோதானே இப்பொழுது செய்திருக்கிறார். அவருக்கு உண்மையில் மூளையில் ஏதேனும் கோளாறா அல்லது கடவுள் என்பதே ஒருவித இயற்கை எந்திரமா? பின்னே, குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டுமென்றால் அதே அளவில் இரண்டு இறக்கைகளை என் தோள்பட்டையில் முளைக்கவைத்திருப்பதன் நோக்கம் என்ன?

குருவிகளைப் போன்ற இறக்கை வேண்டுமென்றால் நீங்கள் என்னவென்று புரிந்துகொள்வீர்கள்? குருவிகளைப் போலப் பறப்பதற்கு இறக்கை வேண்டுமென்று கேட்பதாகத்தானே புரிந்துகொள்வீர்கள்? ஆனால் கடவுள் செய்திருக்கும் இந்தக் கூத்தை என்னவென்பது? என் இரண்டு தோள்பட்டைகளிலும் சிட்டுக்குருவிக்கு இருக்கிற இறக்கையின் அளவிற்கு இரண்டு இறைக்கைகள் முளைத்துள்ளன. தூரத்திலிருந்து பார்த்தால் என் தோளில் இரண்டு பல்லிகள் எட்டிக் குதிப்பதற்காக காத்திருப்பதைப் போலத் தோன்றும். அட, பறப்பதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் வெயில் காலங்களில் இதை விசிறியாகவாவது பயன்படுத்தியிருப்பேனே? இப்போது முளைத்திருக்கும் இந்த இறக்கையால் எனக்கு என்ன பயன்? பயன் இல்லாவிட்டாலும் தொலைகிறது. இதனால் எனக்கு ஏற்படப்போகும் தொல்லைகளைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்.

இப்பொழுது அதிகாலை ஐந்து மணியாகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் எனது அன்றாட வேலைகளைத் துவங்கியாகவேண்டும். அன்றாட வேலைகளென்றால் படிப்பது, குளிப்பது, பள்ளிக்குக் கிளம்புவது இவைதான். ஆனால் இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை நான் யாரிடம் போய்ச் சொல்லுவேன்? யாருக்கு இது புரியப்போகிறது?

அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் என்ன செய்வார்கள்? அழுவார்கள். குழம்பிப்போவார்கள். மருத்துவரிடம் கூட்டிச் செல்வார்கள். மருத்துவருக்கு என்ன தெரியும்? அவர் என்னிடம் என்னவெல்லாம் கேட்பார்? காய்ச்சலடிக்கையில் எப்படி இருக்கிறதென்பதைக் கூட என் அப்பாதான் மருத்துவரிடம் சொல்லுவார். இப்பொழுது கேட்கப்போகும் கேள்விகளுக்கு என் அப்பாவுக்கும் கூட பதில் தெரியாதே? பின்னே, அவருக்குத்தான் இறக்கை முளைத்ததில்லையே? அப்பாவை விடுங்கள்; மருத்துவருக்கு மட்டும் இறக்கை முளைத்திருப்பது குறித்து என்ன தெரிந்திருக்கப் போகிறது? கால்நடை மருத்துவர் என்றால் கூட இறக்கைகளைப் பற்றி எதையேனும் படித்திருப்பார். இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இறக்கைகளை வெட்டிவிட முயற்சிக்கலாம். ஆனால் இறக்கையை வெட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்? இது உடனடியாகச் செய்கிற காரியமும் இல்லவே?

மருத்துவரிடம் போவது மட்டுமல்ல எனது பிரச்சினை. அத்துடன் முடிந்துவிடுமானால் விட்டுவிடலாம். அதனையடுத்து இந்தச் செய்தி அதிவிரைவாகப் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று உலகெங்கிலும் பரவிவிடுமே? உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கையில் காகிதத்தையும், ஒலிவாங்கியையும் எடுத்துக் கொண்டு “ உங்களுக்கு இறக்கை முளைச்சதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? “ என்ற ஒரே கேள்வியை ஓராயிரம் வகைகளில் கேட்டுக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து நிற்பார்களே, அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லுவேன்? ஏற்கெனவே படித்ததை மனப்பாடம் செய்து கொண்டுபோய் பரீட்சையில் எழுதமுடியாத என்னிடம் புத்தகத்தையே கொடுக்காமல் கேள்வியைக் கேட்டால் என்ன செய்வேன்?

இப்படிக் கேள்விகேட்பதைத் தாண்டியும் மேலும் எண்ணற்ற பிரச்சினைகளை நான் எதிர்கொண்டாக வேண்டுமென்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. முதலில் என்னை வீட்டில் இருப்பதற்கு அனுமதிப்பார்களா என்பது முதலில் நான் எதிர்கொள்ளப்போகிற பிரச்சினை. சாதாரணமாக மரபணுக் குறைபாட்டினால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் மூன்றாம் பாலினமாக மனித இனத்தில் பிறந்தவர்களையே வீட்டில் வைத்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் இந்த உலகத்தில் நான் வேறொரு உயிராகவல்லாமா மதிக்கப்படுவேன்? பிறகெப்படி என்னை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள்? என்னை மனித இனத்திலிருந்தே கூடத் தள்ளிவைக்கலாம். எனக்குப் புதுப் பெயர் ஒன்றினை வைக்கலாம். மிருகக்காட்சி சாலையில் கொண்டுபோய் கூண்டுக்குள் அடைத்துவைத்து பொதுமக்களுக்கு என்னை அதிசய விலங்கென்று காட்சிப்படுத்துவார்கள். அதைவிடக் கொடுமை அங்கே வரும் குழந்தைகள் செய்யும் அட்டூழியங்களும், அதற்குப் பெற்றோர் தரும் பதில்களுமாகத்தான் இருக்கும்.

“ அம்மா, இதென்ன?”

“ இதுதான் இறக்கை மனிதன்”

“ கடிக்குமா?”

“ கிட்டப்போனா கடிச்சுவச்சிடும், இங்க இருந்தே பாரு”

“ இந்த முறுக்கைக் குடுத்தா திங்குமா? “

“வீசிப்பாரு. தின்னாலும் திங்கும்”

இதுவரையிலும் அவன் இவன் என்று அழைக்கப்பட்ட என்னை, அது இது என்று அழைக்கப்படப்போவது எத்தனை கொடுமையானதாக இருக்குமென்று நினைத்தாலே தற்கொலை எண்ணம் வந்துதொலைக்கிறது. இதைவிடவும் கொடுமை அங்கே மிருகக்காட்சிச் சாலையில் எனக்குத் துணியெல்லாம் கொடுத்து அடைத்துவைப்பார்களா இல்லை மற்ற மிருகங்களைப் போலவே... கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. இந்தக் கற்பனைதானே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்?

இதுமட்டுமல்ல; இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் சிறிது நேரம்தான். ஆறுமணிக்கெல்லாம் நான் கதவைத்திறந்தாக வேண்டும். பின்னர் நான் மனித இனத்திலிருந்து புதிதான ஒரு இனத்திற்கு மாற்றப்படலாம். நானும் மனிதன் தானென்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? நீங்களாவது பிற உயிர்களுக்கு இருப்பது போன்று நமக்கும் இருந்தால் வசதியாக வாழலாமென்று கற்பனை செய்யாமல் இருங்கள். இந்தத் துன்பம் என்னோடு போகட்டும். இன்று மாலைக்குள் நான் மிருகக்காட்சிச் சாலைக்கோ அல்லது அருங்காட்சியகத்திற்கோ மாற்றப்படலாம். வந்துபாருங்கள். முறுக்கு, லட்டுக்களை எடுத்துவந்தால் தருவதைப் போல கையைப் பாசாங்கு செய்து கொண்டு திரும்பவும் கூண்டுக்கு வெளியே இழுத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்ற மனிதர்களுக்கு இது விளையாட்டு. என் போன்ற விலங்குகளுக்கு இது விளையாட்டென அறிந்துகொள்ள ஆறாவது அறிவுகூடக் கிடையாது.